Published : 27 Jan 2025 07:29 AM
Last Updated : 27 Jan 2025 07:29 AM
சென்னை: தமிழகத்தில் இருந்து மத்திய அரசின் பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ள நல்லி குப்புசாமி, நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா, பறை இசைக் கலைஞர் வேலு ஆசான் உள்ளிட்ட 13 பேருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: தங்களின் துறைகளில் வழங்கி வரும் சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் நல்லி குப்புசாமி, அஜித்குமார், ஷோபனா, அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுளதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள். இவர்களுடைய அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, சிறப்புகள் நிறைந்த அசாதாரண பயணங்கள் எண்ணற்ற மக்களை ஊக்கப்படுத்துகின்றன.
முதல்வர் ஸ்டாலின்: தமிழகத்தில் இருந்து மத்திய அரசின் பத்ம பூஷன் விருதுக்குத் தேர்வாகியுள்ள நடிகர் அஜித்குமார், நல்லி குப்புசாமி, ஷோபனா சந்திரகுமார் ஆகிய மூவருக்கும், பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியிருக்கும் அஸ்வின், குருவாயூர் துரை, தாமோதரன், லக்ஷ்மிபதி ராமசுப்பையர், எ.டி.ஸ்ரீனிவாஸ் உட்பட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். இவர்கள் தங்களது துறைகளில் மென்மேலும் உயரங்களை அடைந்து தமிழகத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதுக்கு நடிகர் அஜித் குமார், நல்லி குப்புசாமி, ஷோபனா ஆகியோர் தேர்வாகி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல் பத்மஸ்ரீ விருதுகளுக்கு தேர்வான கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்பட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.
முன்னாள் ஆளுநர் தமிழிசை: நடிகர் அஜித்குமார் சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த போட்டியாளராக தேசத்துக்கு பெருமை சேர்த்ததற்கு, பாரத தேசம் பதம்பூஷன் மூலம் அவருக்கு பெருமை சேர்த்திருக்கிறது.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தமிழகத்தில் இருந்து பத்மபூஷன், மற்றும் பத்மஸ்ரீ விருதுகளுக்கு தேர்வாகியுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். பல்வேறு சாதனைகளுக்கு மணிமகுடமான இவ்விருது, இன்னும் பல சாதனைகளைப் புரிய நம் மாநிலத்துக்கு ஊக்கமாக அமையட்டும்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: தமிழகத்தை சேர்ந்த அஜித்குமார், எம்.டி.ஸ்ரீனிவாஸ் உள்பட 13 பேருக்கு பத்ம பூஷன், பத்மஸ்ரீ விருதுகள் வழங்கி தமிழகத்தின் சிறந்த ஆளுமைகளை அங்கீகரித்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: கலை, சமூகப்பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நாட்டின் உயரிய விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: இந்திய அரசின் பத்ம விருதுகளை பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல உயரிய விருதுகளைப் பெற எனது நல்வாழ்த்துகள்.
பாமக தலைவர் அன்புமணி: குடியரசு தினத்தையொட்டி பத்ம விருதுகளை பெற்ற அனைவரும் தங்களின் துறைகளில் மேலும் மேலும் சாதனை படைக்கவும், இன்னும் உயரிய விருதுகளை வெல்லவும் வாழ்த்துகிறேன்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பத்ம விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த நல்லி குப்புசாமி, அஸ்வின், அஜித்குமார், ஷோபனா, வேலு ஆசான் உள்ளிட்ட 13 பேரையும் பாராட்டி வாழ்த்துகிறேன்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகளுக்கு தேர்வாகி தமிழகத்துக்கு பெருமை சேர்த்திருக்கும் அனைவரும் அவரவர் துறைகளில் மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்தி மகிழ்கிறேன்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். அவருக்கு என் அன்பும், வாழ்த்துகளும்.
இவர்களுடன் முன்னாள் எம்பி சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment