Published : 26 Jan 2025 10:52 PM
Last Updated : 26 Jan 2025 10:52 PM

மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு!

மதுரையிலிருந்து அ.வள்ளாலப்பட்டி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினை சாலையில் திரண்டு நின்று வரவேற்ற பொதுமக்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

கி.மகாராஜன்/ என்.சன்னாசி

மதுரை: மதுரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர்.

மேலூர் அருகே அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு எதிராக மேலூர் பகுதி மக்கள் கடந்த 2 மாதங்களாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை கைவிடக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டங்ஸ்டன் திட்டம் முழுமையாக கைவிடப்படுவதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே போராட்டத்தை நிறுத்துவதாக மக்கள் அறிவித்தனர். தொடர்ந்து மேலூர் பகுதியிலிருந்து விவசாய சங்க பிரதிநிதிகள் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் டெல்லிக்கு நேரில் சென்று மத்திய கனிமவளத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை நேரில் சந்தித்து டங்ஸ்டன் திட்டத்தை கைவிட கோரிக்கை வைத்தனர். இதையடுத்து டங்ஸ்டன் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அரசாணை பிறப்பித்தது.

டங்ஸ்டன் திட்டம் ரத்தானதை மேலூர் பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், நடனமாடியும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு போராட்டக்குழு நிர்வாகிகள் சென்னைக்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது மேலூர் பகுதியில் நன்றி தெரிவிக்கும் விழா நடத்துவதாகவும், அதில் பங்கேற்க வேண்டும் என்றும் முதல்வருக்கு அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பை ஏற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதுரை வந்தார்.

மதுரையிலிருந்து காரில் அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டிக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 25 கிலோ மீட்டர் தூரம் மக்கள் சாலையோரம் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். கிராமங்களில் செல்லும் போது மக்கள் பட்டாசு வெடித்து முதல்வரை வரவேற்றனர். வழிநெடுகிலும் முதல்வரை வரவேற்று பொதுமக்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. திமுக கொடிகள் காணப்படவில்லை. முதல்வர் அரிட்டாபட்டிக்கு வந்ததும் பெண்கள் குலவையிட்டு வரவேற்றனர். அரிட்டாபட்டி மந்தை கருப்பு திடலுக்கு மாலை 5.55 மணிக்கு வந்த முதல்வர் அங்கு கிராம நாடக மேடையில் நின்று 10 நிமிடம் பேசிவிட்டு அ.வள்ளாலப்பட்டிக்கு சென்றார். அரிட்டாபட்டியில் பொதுமக்கள் பலர் முதல்வரிடம் மனு அளித்தனர்.

12 ஆண்டுக்கு முன்பு ஆசிரியர் பயிற்சி முடித்த டி.கல்லுபட்டி ஆசிரியர் பவித்ரா என்பவர், வேலுநாச்சியார் போன்று தலையில் தலைப்பாகை கட்டி வந்து ஆசிரியர் பணி கோரி முதல்வரிடம் மனு கொடுத்தார். இடப்பிரச்சினை தொடர்பாக முதுகுளத்தூர் ஏனாதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மனு அளித்தார்.

அ.வள்ளாலப்பட்டியில் முதல்வருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அம்பலக்காரர்கள் மகாமுனி, சேதுராகவன் ஆகியோர் மக்கள் சார்பில் முதல்வருக்கு கள்ளழகர் சிலையை நினைவுப்பரிசாக வழங்கினர். தமிழக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கே.ஆர். பெரியகருப்பன், அர.சக்கரபாணி, பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோ.தளபதி, ஆ.வெங்கடேசன், எம்.பூமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ். சங்கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பாராட்டு விழா குறித்து அ.வள்ளாலப்பட்டியைச் சேர்ந்த விஜிதா கூறுகையில், டங்ஸ்டன் திட்டத்தால் மக்கள் 2 மாதமாக நிம்மதியில்லாமல் இருந்தனர். மன உளைச்சலுடன் இருந்தனர். ரத்து வார்த்தைக்காக காத்திருத்தோம். டங்ஸ்டன் திட்டம் ரத்துக்கு முதல்வர் தான் காரணம். சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதை அடுத்து திட்டம் ரத்தாகும் என்ற நம்பிக்கை இருந்தது. அதன்படி திட்டம் ரத்தாகியுள்ளது. அதை கொண்ட எங்கள் கிராமத்துக்கு குடியரசு தினத்தில் முதல்வர் நேரில் வருவது எங்களுக்கு பெருமையாக உள்ளது என்றார்.

இந்திரா கூறுகையில், முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டத்தை வர விடமாட்டேன் என்றார் முதல்வர். அவர் சொன்னபடி செய்துள்ளார் என்றார்.

வள்ளாலப்பட்டி விஜய் கூறுகையில், டங்ஸ்டன் திட்டத்தால் மக்கள் பயத்தில் இருந்தனர். திட்டம் ரத்தானது மனநிறைவை அளித்துள்ளது. இதனால் கிராம மக்கள் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துகிறோம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x