Published : 23 Jul 2018 04:39 PM
Last Updated : 23 Jul 2018 04:39 PM
கர்நாடகாவில் பெய்த பலத்த மழையால் உபரி நீர் திறக்கப்பட்டு, மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. எதிர்பார்க்கப்பட்டதை விடவும் வேகமாக மேட்டூர் அணை நிரம்யுள்ளது. இந்த அணை முழு கொள்ளளவான 120 அடியை இன்று எட்டியது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் முழுமையாக திறக்கப்படுகிறது.
கரை புரண்டு வரும் காவிரி
கர்நாடகாவிலிருந்து மேட்டூருக்கு காவிரி நீர், இரண்டு அணைகளிலிருந்து நேரடியாக கிடைக்கிறது. ஒன்று கேரளா- கர்நாடக எல்லையில் உள்ள கபினி அணை. அங்கு திறக்கப்பட்டால் கபினி ஆறாக வந்து, 150 கிலோ மீட்டருக்கும் மேல் பயணம் செய்து நர்சிபூர் என்ற இடத்தில் காவிரியுடன் கலக்கிறது.
தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் தரும் கர்நாடகாவில் உள்ள மிக முக்கி அணை மைசூருவிலிருக்கும் கிருஷ்ணராஜசாகர் என்ற கேஆர்எஸ். இங்கு திறக்கப்படும் தண்ணீர் காவிரியாக வந்து நர்சிபூரில் கபினி தண்ணீருடன் சேர்ந்து ஒகேனக்கல் வந்து சேர்கிறது.
பிரமாண்டமான மேட்டூர் அணை
காவிரியில் உள்ள வேறு அணைகளான ஹேமாவதி, ஹாரங்கி இரண்டும் நிரம்பினால் அந்த நீர் கிருஷ்ணராஜசாகருக்கு வந்து சேரும். ஹேமாவதி, ஹாரங்கி அணைகளின் தண்ணீர் கேஆர்எஸ் வந்து அதன் மூலமே தமிழகத்திற்கு வரும். இதில், கபினி அணை 15.67 டிஎம்சியும், ஹேமாவதி 35.76 டிஎம்சியும், ஹாரங்கி அணை 8.07 டிஎம்சியும் கொள்ளளவு கொண்டது. கிருஷ்ண ராஜசாகர் அணை 45.05 டிஎம்சி தண்ணீர். ஆக மொத்தம் கர்நாடகாவில் காவிரி பாசன அணைகளில் 105.55 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்கக முடியும்.
தமிழகத்தில் காவிரியின் குறுக்கே உள்ள மேட்டூர் அணையின் கொள்ளளவு 93.4 டிஎம்சி ஆகும். தமிழகத்திலேயே பெரிய அணை மேட்டூர் தான். தமிழகத்தில் உள்ள பெரியாறு, வைகை, பாபநாசம், கிருஷ்ணகிரி என அனைத்து அணைகளின் கொள்ளவும் கூட மேட்டூர் அணைக்கு ஈடாகாது. கர்நாடகாவில் திறந்து விடப்படும் காவிரி நீர் முழுவதையும் தாங்கி நிற்கும் அணையாக மேட்டூர் உள்ளது.
நீர்பாசன திட்டமிடல்
இந்த தடைகளை தாண்டி தமிழகத்திற்கு பாய்ந்தோடி வரும் காவிரி நீரை உரிய முறையில் சேமித்து பயன்படுத்த வேண்டிய கடமை தமிழகத்திற்கு உள்ளது. ஆனால் முறையான பாசன திட்டம், நீர் மேலாண்மை இல்லாததால் பெருமளவு தண்ணீர் வீணாகும் சூழல் தான் உள்ளது.
மேட்டூர் அணை நிரம்பி தற்போது உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. உபரி நீர் திறப்பு அதிகமாக இருக்கும்பட்சத்தில் அதனை முழுமையாக சேமிக்க முடியாத சூழல் ஏற்படும் என நீர் வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தண்ணீர் வரும்போது மட்டுமே சேமிப்பை குறித்து கவலைப்படுவதை விடுத்து முன்கூட்டியே சரியான திட்டமிடல் அவசியம் என்கின்றனர்.
இதுபற்றி சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விவசாயம், நீர்பாசனம், நீர் மேலாண்மைத்துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியனிடம் பேசினோம். அவர் கூறியதாவது:
தமிழகத்தை பொறுத்தவரை 4 ஆண்டுகளாக மோசமான வறட்சி நிலவியது. காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டதால் தமிழகத்திற்கு உரிய நீர் வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அது எப்படியாகினும் தண்ணீர் வந்தால் அதை சரியான முறையில் பயன்படுத்தி சேமிக்க வேண்டியது நமது இலக்காக இருக்க வேண்டும்.
மேட்டூர் அணையில் நீர்மட்டம் 90 அடி இருக்கும்போதோ திறந்து இருக்க வேண்டும். அவ்வாறு திறந்து இருந்தால் அணை நிறைவிட்டாலும் கூட, தண்ணீர் முழுமையாக கடைமடைப் பகுதி வரை சென்று சேர்ந்திருக்கும். தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. கால்வாய்கள், பாசன வாய்க்கால்களை தூர்வாரி நீரை சேமிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.
முறையான தூர்வாரும் பணிகள் பல ஆண்டுகளாகவே நடைபெறவில்லை. கால்வாய்கள் புல் மண்டி இருப்பதால் தண்ணீர் செல்வதில் சிக்கல் நிலவுகிறது. கிளை கால்வாய்கள் உட்பட அனைத்து தூர்வாரப்பட்டால் தான், மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடைப் பகுதி வரை சென்று சேரும். விவசாயிகளும் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ளவில்லை.
தண்ணீருக்காக போராடும் விவசாயிகள், தண்ணீர் வரும்போது அதனை சேமிப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். கால்வாய்களை தூர்வாருவது ஒருபுறம் என்றால் விவசாயிகளும் தங்கள் தரப்பு முயற்சிகளை செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
தமிழகத்தின் பாசனப்பகுதியில் 63 சதவீதம் காவிரி பாசன பகுதி தான். இதனால் இந்த விஷயத்தில் தமிழக அரசு கூடுதல் முனைப்பு காட்ட வேண்டும். இந்த கால்வாய்கள் அனைத்தும் சுத்தம் செய்து இருந்தால் மட்டுமே வேதாரண்யம் பகுதி வரை தண்ணீர் செல்ல முடியும்.
‘ஒரு புல் ஒரு கலன் தண்ணீரை சேமிக்கும்’ என கிராமத்தில் சொல்வார்கள். வயல்வெளியில் பாயும் சாதாரண கால்வாயை தூர்வாரினால் 900 மீட்டர் சென்றடைய 15 நிமிடங்கள் பிடிக்கும். அதுவே, தூர்வாராவிட்டால் 45 நிமிடங்கள் கூடுதலாக தேவைப்படும். இதுமட்டுமின்றி தண்ணீர் உறிஞ்சப்பட்டு, நீர் பாயும் பாசன அளவும் மூன்றில் ஒரு பங்கு குறைந்து விடும். அப்பாடியானல் காவிரி பாசனப்பகுதியில் உள்ள பல நூறு கிலோ மீட்டர் தொலைவு கொண்ட காவிரி கால்வாய்களில் எவ்வளவு தண்ணீர் வீணாகும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
வீராணம் ஏரி
பாசனத்திற்கு மட்டுமின்றி காவிரி நீரை நம்பியே சென்னை உள்ளிட்ட நகரங்களும் உள்ளன. மேட்டூரில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீர், கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் சேமிக்கப்படுகிறது. இங்கிருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்பப்படுகிறது. 47.50 அடி உயரம் கொண்ட வீராணம் ஏரியின் கொள்ளளவு 1.47 டிஎம்சி. எனினும் இங்கிருந்து சென்னைக்கு தண்ணீரை அனுப்ப முடியும் என்பதால் அந்த தண்ணீரை சென்னையில் உள்ள பிற ஏரிகளில் சேமிக்க முடியும்.
காவிரி நீரை வீராணத்தில் நிரப்பினால் சென்னை உள்ளிட்ட நகரங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இயலும். ஆனால் தண்ணீரை கொண்டு செல்லும் நடவடிக்கைகள் இன்னமும் தொடங்கவில்லை.
தடுப்பணை
காவிரி ஆற்றில் மணல் எடுக்கப்பட்டதால் குழிகளாக மாறி தண்ணீர் போவது முற்றிலும் குறைந்து விட்டது. எனவே காவிரி நீர் வரத்தை சீரமைக்க மேட்டூர் தொடங்கி கடைசி பாசனப்பகுதி வரை ஒவ்வொரு 15 கிலோ மீட்டர் இடைவெளியிலும் 3 அடி உயரம் கொண்ட சிறிய தடுப்பணைகளை அமைக்கலாம். இந்த அணைகள் மூலம் கணிசமான அளவு தண்ணீரை சேமிக்க முடியும். அத்துடன் நிலத்தடி நீ்ர்மட்டமும் வெகுவாக உயரும்.
கடலில் சென்று கலக்க வேண்டுமா?
ஆற்று நீரில் கணிசமான பகுதி கடலில் சென்று கலக்க வேண்டும் என்பது பல இயற்கை ஆர்வலர்களின் கருத்து. ஆனால் அதற்கான எந்த விஞ்ஞான ஆதாரமும் இல்லை. கடலில், நன்னீரான மழை நீர் ஏற்கெனவே சேர்ந்து கொண்டு தான் இருக்கிறது. நமது தேவையை பொறுத்த ஆற்று நீரை சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்தும் பழக்கம் நீண்டகாலமாக உலகம் முழுவதும் இருந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT