Published : 26 Jan 2025 01:08 AM
Last Updated : 26 Jan 2025 01:08 AM
கூடலூர்: முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக-கேரள எல்லையில் விவசாயிகள் நேற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லை பெரியாறு அணை பராமரிப்பு, கண்காணிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம், மத்திய கண்காணிப்புக் குழுவை நியமித்தது. இக்குழு கலைக்கப்பட்டு, கடந்த நவம்பரில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் முல்லை பெரியாறு அணை கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, 7 பேர் கொண்ட புதிய மேற்பார்வைக் குழுவை மத்திய நீர்வள ஆணையம் நியமித்தது. இதில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் அனில்ஜெயின் தலைமையில், இரு மாநிலங்களைச் சேர்ந்த தலா 2 அதிகாரிகள், 2 தொழில்நுட்ப விஞ்ஞானிகள் உட்பட 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இதில் கேரள மாநில தரப்பில் உள்ள அதிகாரிகளை நீக்கம் செய்ய வேண்டும் என்று பெரியாறு வைகை பாசன விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக-கேரள எல்லையான லோயர்கேம்ப்பில் நேற்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுவிக் பாலசிங்கம் தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, துணைப் பொதுச் செயலாளர் உசிலை நேதாஜி, தாய் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். பேருந்து நிறுத்தத்தில் இருந்து விவசாயிகள் ஊர்வலமாகப் புறப்பட்டு, பென்னிகுவிக் மணிமண்டபம் அருகே சென்றனர். அங்கு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், தொடர்ந்து கேரளாவை நோக்கிச் செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். பின்னர், அப்பகுதியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் விவசாய சங்க நிர்வாகிகள் பேசும்போது, "40 ஆண்டுகளாக பெரியாறு அணைக்கு எதிரான தவறான தகவல்களை கேரள அரசு பரப்பி வருகிறது. தொடர்ந்து நாங்கள் காந்திய வழியில் போராடி வருகிறோம். அணையை உடைக்க முயன்றால், ஒவ்வொரு விவசாயியும் போர் வீரனாக மாறி, கடும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
பால் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் இங்கிருந்துதான் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. 2011-ம் ஆண்டுபோல மீண்டும் ஒரு போராட்டத்தில் ஈடுபடவும் தயங்க மாட்டோம். கேரளாவில் முல்லை பெரியாறு அணைக்கு எதிராக அனைத்து கட்சிகள், அமைப்புகள் ஒன்றிணைந்து போராடுகின்றன. ஆனால், தமிழகத்தில் அவ்வாறு இல்லை. எனவே, ஆளும்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அணையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, போராட்டக் களத்துக்கு வர வேண்டும்.
தொடர்ந்து அணைக்கு எதிராக செயல்பட்டால், நாங்கள் கேரளாவுக்குள் சென்று போராட்டம் நடத்துவோம். மேலும், இந்த விவகாரத்தில் உண்ணாவிரதம் இருந்து உயிரை விடவும் தயங்க மாட்டோம்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment