Published : 25 Jan 2025 07:38 PM
Last Updated : 25 Jan 2025 07:38 PM
புதுடெல்லி: தேர்தல் நடைமுறைகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக முதல்முறையாக ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு சிறப்பாக செயல்பட்ட மாநிலத்துக்கான தேசிய விருதை தலைமைத் தேர்தல் அதிகாரி ரவிகுமாருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
தமிழகத்தில், திருநெல்வேலியை சேர்ந்தவர் கே.ரவிகுமார். ஐஏஎஸ் அதிகாரியான இவர், ஜார்கண்ட் மாநில ஐஏஎஸ் தொகுப்பை சேர்ந்தவர். இவர், அந்த மாநிலத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி வகிக்கிறார். அங்கு இவர் கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலையும், சட்டசபை தேர்தலையும் திறம்பட நடத்தினார்.
இந்த தேர்தல்களின்போது அவர், வாக்காளர் பட்டியலை சிறப்பான முறையில் ஒருங்கிணைத்து, முழுமையான தகவல்களுடன், பிழைகளே இல்லாமல் தயாரிக்க முயற்சி எடுத்தார். விடு வீடாக தேர்தல் அதிகாரிகள் சென்று, வாக்காளர்களையும் பட்டியலையும் பலமுறை சரிபார்த்து, அவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர்களை ஒட்டச்செய்தார். வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்க்க சிறப்பு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன.
அதே நேரத்தில், வாக்காளர்களுக்கு தேர்தலின்போது, ஓட்டுச்சாவடிகளில் மின்சாரம், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை திறம்பட ஏற்பாடு செய்ததுடன், மூத்த வாக்காளர்களுக்கு சக்கர நாற்காலிகள், சாய்தள பாதை ஏற்படுத்தி தந்தார். தேர்தலை சுதந்திரமாகவும், அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்திக்காட்டினார்.
கடைக்கோடி கிராமங்களில் கூட வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தியதுடன், போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார். நக்லைசட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் கூட முதல்முறையாக அமைதியான முறையில், மக்கள் அச்சமின்றி ஓட்டளிக்க ஏற்பாடு செய்தார். இப்படி எல்லா விதத்திலும் சிறப்பாக செயல்பட்டு, நாட்டிலேயே தேர்தல் செயல்பாடுகளை சிறப்பாக செய்து காட்டிய மாநிலம் என்ற பெருமையை ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு ரவிகுமார் பெற்றுத்தந்தார்.
இதற்காக அந்த மாநிலம், தேர்தல் நடைமுறைகளை சிறப்பாக செயல்படுத்தி நாட்டிலேயே தலைசிறந்த மாநிலம் என தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேசிய வாக்காளர் தினத்தையொட்டி டெல்லி மானக்ஷா சென்டரில், ஜொராவர் ஆடிட்டோரியத்தில் இன்று நடந்த விழாவில் தேர்தல்களில் சிறப்பாக செயல்பட்டதற்கான சிறந்த மாநிலத்துக்கான தேசிய விருதை ஜார்க்கண்ட் தலைமை தேர்தல் அதிகாரி ரவிகுமாருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...