Published : 25 Jan 2025 03:38 PM
Last Updated : 25 Jan 2025 03:38 PM
தருமபுரி: வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ விசாரணை கோரவில்லை என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
தருமபுரியில் நாளை (ஜன.26) தொடங்கி 3 நாட்களுக்கு நடக்கவுள்ள அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் 18-வது மாநில மாநாட்டில் பங்கேற்க தருமபுரி வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று (ஜன.25) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “ஜனவரி 26, அரசியலமைப்புச் சட்டத்தை நாடு ஏற்றுக் கொண்ட நாள். அரசிலமைப்புச் சட்டத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் அதை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஜனவரி 26-ல் இளைஞர் பெருமன்ற மாநாட்டை தொடங்கி நடத்த திட்டமிட்டுள்ளோம்.
ஆர்எஸ்எஸ்-ன் அரசியல் பிரிவான பாஜக, மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை தொட்டு வணங்கங்கூடிய பிரதமர் நரேந்திர மோடி, அதை நடைமுறையில் பின்பற்றவில்லை. மாறாக மனுதர்ம ஆட்சியைதான் அவர்கள் முன்வைக்கின்றனர். ஒரே நாடு ஒரே தேர்தல், தேசிய கல்விக் கொள்கை சட்டம் போன்றவை அதன் வெளிப்பாடுகள். இறுதியாக ‘ஒரே கட்சி ஒரே ஆட்சி’ என்ற நிலையை ஏற்படுத்துவது அவர்களின் நோக்கம். சர்வாதிகார நிலையை நோக்கி நம் நாட்டை நகர்த்தி வருகின்றனர். அதை தடுக்கவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மாநாட்டில் இது தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. வேலையின்மை என்ற பிரச்சினை நாட்டைஇன்று கொதிநிலையில் வைத்திருக்கிறது. இது விரைவில் கொந்தளிக்கக் கூடும்.
வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவை கலந்த விவகாரம் தொடர்பாக தற்போது 3 பேரின் பெயரை காவல்துறை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என விசிக, சிபிஎம் கட்சியினர் கோரியுள்ளனர். ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ விசாரணை கோரவில்லை. வழக்கின் போக்கினை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழக ஆளுநர், ஆளுநராக நடந்து கொள்ளாமல் ஆர்எஸ்எஸ்-ன் கைப்பாவையாக செயல்படுகிறார். கண்ணியம் மிக்க இந்த பதவியில் இருந்து கொண்டு ஆளுநர் இவ்வாறு செயல்படுவது அழகல்ல. தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு வேண்டுமானால் ஆர்எஸ்எஸ் அல்லது பாஜகவில் இணைந்து அவர் செயல்படலாம். ஆளுநர் வாயை திறந்தாலே தமிழகத்தில் பிரச்சினை ஏற்படுகிறது. வள்ளுவர் மீது மதச் சாயம் பூசியவர் ஆளுநர். அவர் அழைப்பு விடுத்த தேநீர் விருந்தை, ஜனநாயகத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் காக்க விரும்பும் அரசியல் கட்சியினர் ஏற்கமாட்டார்கள். நாங்களும் அந்த விருந்தை புறக்கணித்துள்ளோம்.
வாழும் காலத்திலேயே பெரியார் கல்லடிகள், சொல்லடிகள், காலணி வீச்சுகளென பலவற்றை பார்த்தவர். இன்று சீமான் பேசுவதால் பெரியார் தாழ்ந்து விடமாட்டார். சீமான் மட்டுமல்ல பெரியார் பற்றி இன்னும் யார் பேசினாலும் கவலையில்லை. மேடைகளில் பெரியார் பல மணி நேரம் பேசினாலும் தன் பேச்சை முடிக்கும்போது, ‘நான் பேசுவது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை ஏற்க வேண்டாம். சுயமாக சிந்தித்து உடன்பாடு இருந்தால் மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறுவார்.
எனவே, பெரியார் பேச்சுகளில் சீமானுக்கு உடன்பாடு இல்லையெனில் அதை ஏற்காமல் தவிர்த்து விடலாமே. கடந்த காலங்களில் திமுகவை விட, ஆசிரியர் கி.வீரமணியை விட, எங்களை விட பெரியாரை உச்சத்தில் புகழ்ந்தவர் சீமான் தான். பெரியார் நேற்றும், இன்றும், நாளையும் தேவைப்படுகிறார்,” என்று அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியின்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைத் தலைவர் பெரியசாமி, தமிழ்நாடு பழங்குடியின மக்கள் சங்க மாநில கவுரவ தலைவர் நஞ்சப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் சிவபுண்ணியம், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் தேவராசன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநில செயலாளர் பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கலைச்செல்வம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...