Published : 25 Jan 2025 03:33 PM
Last Updated : 25 Jan 2025 03:33 PM
சென்னை: “வேங்கைவயல் விவகாரத்தில் புகார் அளித்தவர்களே குற்றவாளியாக ஆக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த வழக்கை யாருக்கும் சந்தேகம் வராத வகையில் ஆய்வு செய்து, மறு விசாரணை நடத்த வேண்டும்,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் “கச்சத்தீவு 285 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்தப் பகுதி வாழத் தகுதியற்ற இடமாகும். அதனால்தான், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இப்பகுதியை இலங்கைக்கு கொடுத்துவிட்டு, அரிய வகை கனிமங்கள், தாது வளங்கள், மீன் வளங்கள், பெட்ரோலிய வளங்கள் மிகுந்த 25 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட கடல் பரப்பை இந்தியாவுக்காக பெற்றார். இதைத்தான் ராஜதந்திரம் என்று சொன்னேன்.
இதைப் புரிந்து கொள்ளாமல் கச்சத்தீவு விஷயத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறை சொல்வது கண்டிக்கத்தக்கது. இந்திரா காந்தியின் ராஜதந்திரத்தை ஆவணங்களுடன் வெளியிட்டுள்ளேன். எனவே, இனிமேல் கச்சத்தீவை மீட்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்க வேண்டாம் என்று திமுகவை கேட்டுக் கொள்வோம்.
டங்ஸ்டன் விவகாரத்தில் முன்பு நாட்டின் வளர்ச்சிக்கு இந்தத் திட்டம் தேவை என்றார் அண்ணாமலை. பிறகு பல்லுயிர் பெருக்கத்தைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்திருப்பதாக கூறியுள்ளார். இதிலிருந்து அவரது இரட்டை அரசியல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வேங்கைவயல் விவகாரத்தில் புகார் அளித்தவர்களே குற்றவாளியாக ஆக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த வழக்கை யாருக்கும் சந்தேகம் வராத வகையில் ஆய்வு செய்து, மறு விசாரணை நடத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...