Published : 25 Jan 2025 03:02 PM
Last Updated : 25 Jan 2025 03:02 PM

800 நாட்கள் கழித்து போலீஸின் ‘அரிய கண்டுபிடிப்பு’ - வேங்கைவயல் விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனா காட்டம்

சென்னை: “வேங்கைவயல் வழக்கு பட்டியலின மக்கள் மீது வலியத் திணிக்கப்பட்ட வழக்காகவே கருத வேண்டியுள்ளது. குற்றவாளிகாளிகளாக சித்தரிக்கப்பட்டுள்ள மூவரும் நிரபராதிகள் என்று நிரூபிக்கும் வரை என் போராட்டம் தொடரும்” என்று வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ““வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களின் குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த கொடூரத்துக்கு 800 நாட்கள் கழித்து புதிய கதை ஒன்றைக் கட்டமைத்துள்ளது தமிழக காவல் துறை. பட்டியலின மக்களே தங்கள் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவைக் கலந்து அதை அவர்களே அருந்தியிருக்கிறார்கள் என்ற ‘அரியக் கண்டுபிடிப்பை’ இவ்வளவு நாள் கழித்து துப்பறிந்து கண்டறிந்துள்ளது காவல்துறை.

பட்டியலின மக்கள் மீதான அதிகாரத்தின் அழுத்தம் இன்னும் எத்தனை காலம் நீளும். பட்டியலின மக்களுக்கு எதிரான இந்த விசாரணை அமைப்புகளின் ஒருதலைபட்சமான நடவடிக்கையை எதிர்த்து சட்டரீதியான எனது போராட்டத்தை உடனடியாக துவங்க உள்ளேன். வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களையும், தற்போது குற்றவாளிகள் என்று காவல்துறை சித்தரித்துள்ள முரளி ராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகிய மூவரையும் ஆறு மாதங்களுக்கு முன்பே நான் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தேன்.

மனிதக்கழிவு கலந்த தண்ணீரை ஒருவாரமாகக் குழந்தைகள், முதியவர்கள் என அந்த மக்கள் குடித்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டார்கள். சொந்த குழந்தைகளையே இப்படி வதைக்கும் அளவுக்குக் கொடூர மனிதர்களா அந்த எளிய மக்கள்? இதை எவ்வாறு மனம் வந்து காவல்துறையால் குறிப்பிட முடிகிறது. புலன் விசாரணை செய்த காவல்துறைக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்று வந்த அழுத்தமே புகார்தாரர்களைக் குற்றவாளியாகக் காட்டும் தந்திரத்தைக் கையில் எடுக்க வைத்துள்ளதோ என்று ஐயப்பட வேண்டியுள்ளது.

இந்தச் சம்பவத்தின் ஆணிவேராகச் சாதி ஆதிக்கம் இருப்பதையும், காவல் துறை இந்த விவகாரத்தை அப்போதே திசை திருப்பும் வேலையில் இறங்கியதையும் தெரிந்தே, மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் தனியாக நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு சட்டரீதியான போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த மூவரும் நிரபராதிகள் என்று நிரூபிக்கும் வரை என் போராட்டம் தொடரும். இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அதிகார வர்க்கத்தை நோக்கி எனது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

இந்த வழக்கு பட்டியலின மக்கள் மீது வலியத் திணிக்கப்பட்ட வழக்காகவே கருத வேண்டியுள்ளது. வலியவர்களின் குரல் அம்பலத்துக்கு வராது என்பது போல இந்த எளிய மக்களின் குரலை அதிகாரம் என்கிற கயிற்றைக் கொண்டு நெறிக்கும் வேலையை காவல் துறை மேற்கொண்டுள்ளது வெட்கக்கேடான செயல்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயத்தை நிலைநாட்டும் நீதிக்கான பயணத்தை அந்த மக்களுடன் இணைந்து நான் உடனடியாக மேற்கொள்வேன். அதிகாரவர்கத்துக்கு எதிராக அந்த அதிகாரமற்றவர்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யும் பணியே எனது இப்போதைய தலையாய பணியாகக் கருதுகிறேன். பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமே என்னுடைய பயணம் இருக்கும். அவர்களுக்கு நியாயமான நீதி கிடைக்கும் வரை நான் ஓயப்போவதில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x