Last Updated : 25 Jan, 2025 09:52 AM

 

Published : 25 Jan 2025 09:52 AM
Last Updated : 25 Jan 2025 09:52 AM

ஓட்டுக் கேட்க மட்டும் தான் நாங்களா..? - ‘பொங்கல் பரிசு’ விவகாரத்தில் பொங்கி வெடிக்கும் திமுக மகளிரணி

கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக பொறுப்பாளர்களுக்கு ‘பொங்கல் பரிசு’ வழங்கும் அமைச்சர் எ.வ.வேலு

தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லத் தயங்கினாலும் கழகத்தினருக்கு வெகுமதி தருவதை திமுக மறப்பதில்லை. அதேபோல் பொங்கல் பண்டிகைக்கும் உடன்பிறப்புகளை மகிழ்விக்க அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தங்கள் தகுதிக்கேற்ப ‘பொங்கல் பரிசுகளை’ வழங்குவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் மாவட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், நகரச் செயலாளர் அந்தஸ்தில் இருப்பவர்களுக்கு லட்சங்களிலும் கிளைச் செயலாளர்களுக்கு ஆயிரங்களிலும் பொங்கல் பரிசு தேடி வந்தது.

கடலூர் மேற்கு மாவட்ட திமுக-வில் தொண்டரணி, இளைஞரணி, மருத்​துவர் அணி, பொறியாளர் அணி, மகளிரணி நிர்வாகி​களுக்கும் இம்முறை பொங்கல் பரிசு வழங்கப்​பட்​ட​தாகச் சொல்கிறார்கள். இதில்தான் மகளிரணி​யினருக்கு பாரபட்சம் காட்டியதாக பொல்லாப்புக் கிளம்பி இருக்​கிறது. இந்த மாவட்​டத்தில் மகளிரணியின் மாவட்ட நிர்வாகி​களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு தரப்பட்​ட​தாம்.

மற்றவர்​களுக்கு ‘பொங்கல்’ தான் எனப் புலம்​பு​கிறார்கள் சங்கராபுரம் தொகுதி மகளிரணி நிர்வாகிகள். பொங்கல் பண்டிகைக்காக கள்ளக்​குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சரான எ.வ.வேலுதான் திமுக-​வினருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை 5 விதமான பைகளில் வைத்து வழங்கி​னார். இதில், மாநில மகளிரணி துணைச் செயலாளரான அங்கையற்​கண்​ணிக்கு வழங்கிய பொங்கல் தொகுப்பு பையில் ரூ.50 ஆயிரம் ரொக்கம் இருந்​த​தாம்.

அதுவே மாவட்ட மகளிரணி அமைப்​பாளரான கலாவுக்கும் வழங்கப்பட்ட பையில் ரூ.10 ஆயிரம் தான் இருந்​துள்ளது. மற்றபடி மகளிரணியின் ஒன்றிய, நகர, கிளை பொறுப்​பாளர்​களுக்கு பொங்கல் தொகுப்பு மட்டும் தான் கைக்குக் கிடைத்​த​தாம். இந்த ‘அன்பளிப்பு’ விவகாரம் மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் மத்தியில் இப்போது பெரும் விவாதமாக ஓடிக்​கொண்​டிருக்​கிறது.

இதுகுறித்து திமுக மாநில மகளிரணி துணைச் செயலாளர் அங்கயற்​கண்​ணி​யிடம் கேட்டதற்கு, “மாநில, மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கு கட்சி தலைமையில் இருந்து பொங்கல் பரிசு கொடுத்தது உண்மை​தான். எனக்கும் ரூ.50 ஆயிரம் கொடுத்​தார்கள். அதேசமயம், கட்சியின் இதர நிர்வாகி​களுக்கு பொங்கல் பரிசு தரவேண்​டியது அந்தந்த தொகுதி எம்எல்​ஏ-க்கள் பொறுப்பு” என முடித்துக் கொண்டார்.

கள்ளக்​குறிச்சி மாவட்ட மகளிரணி அமைப்​பாளர் கலாவிடம் கேட்டதற்கு, “எனக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்​தாங்க. நகர, ஒன்றிய நிர்வாகி​களுக்கு பொங்கல் பரிசு எதுவும் தரல” என்று சொல்லி​விட்டு கப்சிப் ஆனார். “கட்சியின் மற்ற அமைப்பு​களைச் சார்ந்த அத்தனை நிர்வாகி​களுக்கும் பொங்கல் பரிசு கொடுத்​திருக்கும் போது மகளிரணிக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்​சம்?” எனக் கேள்வி எழுப்பும் கள்ளக்​குறிச்சி மாவட்ட திமுக மகளிரணி​யினர், “கட்சிக் கூட்டத்​திற்கு பெண்களை திரட்டு​வதற்​கும், தேர்தலின் போது வீடு வீடாகச் சென்று ஓட்டுக் கேட்ப​தற்கும் மட்டும் தான் நாங்களா? ஆயிரம் தான் நியாயம் பேசினாலும் திமுக-​விலும் ஆணாதிக்கம் தான் மேலோங்கி நிற்கிறது.

பொங்கல் முடிந்​து​விட்​டாலும் இதுகுறித்து திமுக மகளிரணியை மேற்பார்வை செய்யும் கனிமொழி​யிடம் எங்கள் ஆதங்கத்தைக் கட்டாயம் சொல்லத்தான் போகிறோம்” என்று அழுத்​த​மாகச் சொல்​கிறார்​கள்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x