Published : 18 Jul 2018 08:39 AM
Last Updated : 18 Jul 2018 08:39 AM

மேட்டூர் அணை நாளை திறப்பு: ஆறுகள், வாய்க்கால்களில் புதர்களை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

சம்பா சாகுபடிக்கு முன்னேற்பாடுகள் செய்யப்படாத நிலையில் டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை திறக்கப்படும் தண்ணீர் நீர்நிலைகளைச் சென்றடைய உதவும் வகையில் ஆறுகள், ஏ பிரிவு வாய்க் கால்களில் உள்ள புதர்களை அகற்ற 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணை ஜூலை 19-ம் தேதி திறக்கப்படவுள்ளது.டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ ரூ.30 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகள் 50 சதவீதம் கூட நிறைவடையவில்லை. மேட்டூர் அணை ஜூலை 19-ம் தேதி திறக்கப்பட்டால், அது கல்லணையை 22-ம் தேதியும், கடைமடையை 27-ம் தேதியும் சென்றடையும் வாய்ப்புள்ளது. தண்ணீர் வந்து விட்டால் இந்தப் பணிகளைத் தொடர இயலாது என்பதால், பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.

டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ 12 லட்சம் ஏக்கரில் நடைபெறும் சம்பா நெல் சாகுபடி முழு அளவில் இந்த ஆண்டு நடைபெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆனால், விவசாயிகளுக்கு தேவையான விதை நெல், உரம், இடுபொருட்கள், பயிர்க்கடன் ஆகியவை விரைந்து கிடைக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண் டும் என்கின்றனர் டெல்டா விவசாயிகள்.

நீரை சேமிக்க என்ன வழி?

இதுகுறித்து காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன் கூறியது:

குறுவைப் பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. சம்பா சாகுபடிக்கான எவ்வித முன்னேற்பாடுகளும் செய்யப்படவில்லை. டெல்டா மாவட்டங் களில் ஆறுகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அணையை திறந்தே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் மேட்டூருக்கு கிழக்கே உள்ள மாயனூரில் 2, மேலணையில் 2, கல்லணையில் 3, கொள்ளிடத்தில் அணைக்கரையில் 2, சேத்தியாத்தோப்பில் 2 டிஎம்சி என ஏறத்தாழ 11 டிஎம்சி வரை தண்ணீரை சேமித்துக் கொள்ளலாம். இதன் மூலம் விவசாயிகள் சம்பா சாகுபடியை தொடங்குவதற்கு கால அவகாசமும் கிடைக்கும் என்றார்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம் கூறியது: மேட்டூர் அணை தண்ணீர் கடைமடைக்கு வருவதற்கு ஏறத்தாழ ஒரு வாரத்துக்கு மேலாகும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்கள் ஒரு வாரத்துக்குள் ஆறுகள், ஏ பிரிவு வாய்க்கால்களில் உள்ள களைச் செடிகளை அகற்ற 100 நாள் வேலைத் திட்டம் மூலம் ஒரு மெகா திட்டத்தை வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அனைத்து கிளை ஆறுகள், கிளை வாய்க்கால்கள், ஏரி, குளம் ஆகிய வற்றுக்கு தண்ணீர் சென்று சேரும் என்றார்.

தமாகா விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன் கூறியது: குடிமராமத்துப் பணிகளை தற்போதுள்ள நிலையிலேயே நிறுத்தி வைத்து, வரும் ஜனவரிக்கு பின்னர் தொடர்ந்து மேற் கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான கடன், விதை, உரங்கள் ஆகியவற்றை வழங்கினால் முழு அளவில் விவசாயிகள் சாகுபடியை தொடங்குவார்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x