Published : 24 Jan 2025 03:59 PM
Last Updated : 24 Jan 2025 03:59 PM

‘டங்ஸ்டன்’ தாக்கம்: வேளாண் மண்டலம் ஆகுமா முல்லைப் பெரியாறு பாசனப் பகுதிகள்?

மதுரை: “எதிர்காலத்தில் டங்ஸ்டன் போன்ற திட்டங்களால் அச்சுறுத்தல் ஏற்படாமல் இருக்க முல்லைப் பெரியாறு பாசன பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து அதன் நிர்வாகி தமிழ்தாசன் கூறியது: “மேலூர் பகுதியில் உள்ள பசுமையான மலைகளையும், பாறைக் குன்றுகளையும் கனிமங்களை வழங்கும் குவாரிகளாக மட்டுமே அரசுகள் அவற்றைப் பார்க்க கூடாது. மேலூர் பகுதியில் உள்ள ஒவ்வொரு மலைக் குன்றும் வரலாறு மற்றும் பல்லுயிரிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். அதற்கு அரிட்டாபட்டி - மீனாட்சிபுரம் பல்லுயிரிய மரபு தளம் என்பது ஒரு சிறிய சான்றாகும்.

பல்லுயிரிய மரபு தளத்துக்கு தகுதி வாய்ந்த புலிமலை, கிடாரிமலை, சோமகிரி மலை, முறிமலை, அருவிமலை, கோட்டைமலை, பனைமலை, மேன்மலை, மான்தலை அய்யனார் கோயில்காடு, கொம்பு தூக்கி அய்யனார் கோயில், மூங்கில்பாறை கருப்பு கோயில் காடு, திரணி கருப்பு கோயில்காடு, தொந்தி கருப்பு கோயில்காடு, அழகுநாச்சியம்மன் கோயில் காடு, பெருங்காட்டு கருப்பு கோயில் காடு என பண்பாட்டு நோக்கிலும், பல்லுயிரிய நோக்கிலும் பல்லுயிரிய மரபு தளத்துக்கு தகுதி வாய்ந்த பல பகுதிகள் மேலூர் பகுதியில் இன்றும் உயிர்ப்போடு இருக்கிறது.

கடந்த 2023 -24 ஆண்டில் மட்டும் புலிப்பட்டி, பூசாரிப்பட்டி பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டது. வஞ்சிநகரம், கள்ளங்காடு, பால்குடி பகுதியில் பெருங்கற்கால சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அரிட்டாபட்டி, கள்ளங்காடு, புலிப்பட்டி பகுதியில் பிற்கால பாண்டிய கல்வெட்டு கண்டறியப்பட்டது. கூலானிப்பட்டி, அரிட்டாபட்டி பகுதியில் முற்கால மற்றும் பிற்கால பாண்டியர் கோயில்கள் கண்டறியப்பட்டது. பால்குடி ஆசிரியம் கல்வெட்டு, வீரசூளாமணிபட்டி கண்மாய் மடைத் தூண் கல்வெட்டு கண்டறியப்பட்டது.

அழகர் கோயில் பகுதியில் முதன்முறையாக மலையன் நாரை என்கிற அறிய வகை பறவைகள் இருப்பது ஆவணம் செய்யப்பட்டுள்ளது. சோமகிரி மலை, பனிமலைகுட்டு, புலிமலை, அருவிமலை, கேசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அழிவின் விளிம்பில் உள்ள சாம்பல் நிற தேவாங்குகள் வாழிடம் கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் வெளிப்படாத பல்வேறு சிறப்புகளை மேலூர் கொண்டிருக்கலாம். அதனை நாம் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறாக வரலாற்று நோக்கிலும், பல்லுயிரிய நோக்கிலும் புதிய புதிய கண்டறிதல்களை அள்ளித்தருகிற நிலமாக மேலூர் இருக்கிறது.

முல்லைத் திணையின் வறல் புல்வெளிகளாக இருந்த மேலூர் பகுதி, வைகை - முல்லைப் பெரியாறு பாசன திட்டங்களுக்கு பிறகு மருத நிலத்துக்குரிய பண்புகளை, பொருளாதார வளர்ச்சி போக்குகளை அடைந்து இருக்கிறது. அதற்கு காரணமான மேலூரின் முல்லைப் பெரியாறு பாசன பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை மேலூர் பகுதியில் சுரங்கம் அமைக்கிற திட்டங்கள் தமிழர் வரலாற்று மற்றும் இயற்கை வளங்களை அழிக்கும் முயற்சியாகவே அமையும். இதை மத்திய மாநில அரசுகள் கணக்கில் கொண்டு, கருத்து கேட்பு கூட்டங்கள் வாயிலாக மக்களின் கருத்துகளை கேட்டறிந்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x