Published : 24 Jan 2025 01:46 AM
Last Updated : 24 Jan 2025 01:46 AM

அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்: பின்னணி என்ன?

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக மீன்வளத் துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன். இவர், 2009-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார். இந்நிலையில், 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த 2006-ல் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வருமானத்துக்கு அதிகமாக சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான சொத்து சேர்த்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததற்கான முகாந்திரம் இருந்ததால், இந்த வழக்கு அமலாக்கத் துறைக்கு மாற்றப்பட்டது.

அமலாக்கத் துறை விசாரணை நடத்தி, 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 160 ஏக்கர் நிலம் உட்பட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.6.5 கோடி மதிப்பிலான 18 சொத்துகளை முடக்கியது.

இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை முடக்கி தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2022-ம் ஆண்டு அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் 18 அசையா சொத்துகள் முடக்கப்பட்டன. இந்நிலையில், ஏற்கனவே அமலாக்கத் துறையால் முடக்கப்பட்ட சொத்துக்களை அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனும், அவரது குடும்ப உறுப்பினர்களும் மறைமுகமாக அனுபவித்து வந்ததும், அதன் மூலம் வந்த வருவாயை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து, மறைமுகமாக ரூ.17.74 கோடி வருமானம் ஈட்டியிருப்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது தூத்துக்குடி, மதுரை, சென்னையில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமாக உள்ள ரூ.1.26 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x