Published : 24 Jan 2025 01:41 AM
Last Updated : 24 Jan 2025 01:41 AM

திமுக தேர்தல் வாக்குறுதிகள் குறித்து முன்னுக்குப்பின் முரணாகப் பேசும் முதல்வர்: இபிஎஸ் விமர்சனம்

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது குறித்து முன்னுக்குப்பின் முரணாக முதல்வர் பேசுவதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 22-ம் தேதி சிவகங்கையில் நடைபெற்ற அரசு விழாவில், முதல்வர் பேசும்போது, “திண்ணையில் உட்கார்ந்து கொண்டு வெட்டிப் பேச்சு பேசுவது போன்று, வாய்க்கு வந்தபடி எதிர்க்கட்சித் தலைவர் பேசலாமா?" என்று கேட்டுள்ளார்.

நீட் தேர்வு ரத்து, குடும்ப அட்டைக்கு கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை, பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும், தமிழக மாணவர்கள் பெற்ற கல்விக் கடன் ரத்து, 100 நாள் ஊரக வேலை வேலை நாட்கள் 150 ஆக அதிகரிக்கப்படும், எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம், மாதந்தோறும் மின்கட்டண கணக்கீடு, பகுதிநேர ஆசிரியர் பணி நிரந்தரம், அனைத்து உணவுப் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை, நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம், முதியோர் உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்படும் என்று நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில், பல்வேறு இடங்களில் பேசும்போது திமுகவின் 2021 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகள் 90 சதவீதத்துக்கும் மேல் நிறைவேற்றப்பட்டுவிட்டன என்று பேசிய முதல்வர் ஸ்டாலின், சிவகங்கையில் நேற்று பேசும்போது, 505 தேர்தல் வாக்குறுதிகளில் 389-ஐ நிறைவேற்றியுள்ளோம். இன்றும் 116 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என பேசியுள்ளார். இதிலிருந்து முன்னுக்குப்பின் முரணாகப் பேசும் முதல்வரின் பொய்முகம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு மக்களை வாட்டி வதைக்கிறது. 3 முறை மின் கட்டணம் உயர்வு, ஏற்கெனவே இருமடங்கு உயர்த்தப்பட்ட சொத்து வரி, இனி ஆண்டுதோறும் 6 சதவீத உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, தொழில் வரி உயர்வு, அனைத்து பதிவுக் கட்டணங்களும் பலமடங்கு உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு என மக்களின் மேல் அதிக சுமையை இந்த அரசு சுமத்தி வருகிறது.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, வழிப்பறி, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, கள்ளச்சாராயம், மணல் கடத்தல், கஞ்சா மற்றும் போதைப் பொருள் கேந்திரமாக தமிழகம் உருவானதற்கு காரணமான இந்த ஆட்சியில், தமிழக மக்கள் படும் சிரமங்களை திசை திருப்பும் நோக்கத்துடன் செயல்படும் மக்கள் விரோத ஆட்சிக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இனியாவது நிதி நிலை பற்றி, தேர்தல் வாக்குறுதிகள் குறித்து, தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள் பற்றி நாங்கள் சொல்வதை ஆராய்ந்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x