Published : 23 Jan 2025 07:09 AM
Last Updated : 23 Jan 2025 07:09 AM

தமிழக காங்கிரஸ் தலைவர் சொல்வதை போல கச்சத்தீவை தாரைவார்த்தது ராஜதந்திரம் என்று முதல்வர் ஸ்டாலின் ஒப்புக்கொள்வாரா? - அண்ணாமலை கேள்வி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் சொல்வதை போல கச்சத்தீவை தாரைவார்த்தது ராஜதந்திரம் என்று முதல்வர் ஸ்டாலின் ஒப்புக்கொள்வாரா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்த தனது எக்ஸ் தளத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது, மறைந்த இந்திரா காந்தியின் ராஜதந்திரம் என்று கூறுகிறார். எங்களுக்கு சில கேள்விகள்.

கடந்த 30 ஆண்டுகளில், இலங்கை அரசால், பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தான் அந்த ராஜதந்திரமா? பலநூறு இந்திய மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டனரே. அதுவும் உங்கள் ராஜதந்திரம் தானா?

மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்தார்கள் நம் தமிழக மீனவ சொந்தங்கள். இதுவும் ராஜதந்திரத்தில் தான் அடங்குமா? கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தபோது, அன்று தமிழகத்தில் ஆட்சியிலிருந்த திமுக, கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்க முழு சம்மதம் தெரிவித்துத் தமிழக மீனவ மக்களுக்குத் துரோகம் செய்ததோடு, கடந்த 50 ஆண்டுகளாக, ஒவ்வொரு தேர்தலின் போதும், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு, தமிழர்கள் உரிமை, என்றெல்லாம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது.

அப்போதெல்லாம் இந்த ராஜதந்திரத்தைப் பற்றித் திமுக காங்கிரஸ் கூட்டணி பேசியதில்லையே ஏன்? தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, சொல்வது போலக் கச்சத்தீவைத் தாரைவார்த்தது ராஜதந்திரம் என்று முதல்வர் ஸ்டாலின் ஒப்புக்கொள்வாரா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x