Published : 22 Jan 2025 04:55 PM
Last Updated : 22 Jan 2025 04:55 PM
சென்னை: தேர்தல் வழக்கில் சேலம் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், காவல் துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர் மிலானி. இவர் சேலம் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்துள்ளார். எனவே, அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், காவல் துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இவ்வழக்கு விசாரணையின்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில், புகார்தாரர் மிலானி எடப்பாடி தொகுதியை சேர்ந்தவரோ, தேர்தலில் போட்டியிட்டவரோ அல்ல. வேட்புமனுவில் எந்த தகவலையும் மறைக்கவில்லை. எனவே, இந்த புகாரே விசாரணைக்கு உகந்ததல்ல என்று வாதிடப்பட்டிருந்தது. அப்போது காவல் துறை தரப்பில், சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சேலம் மாவட்ட குற்றப்பிரிவு வோலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கு தீரப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், காவல் துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment