Published : 22 Jan 2025 01:46 AM
Last Updated : 22 Jan 2025 01:46 AM
யுஜிசி வரைவு அறிக்கைக்கு எதிராக தமிழகத்தைத் தொடர்ந்து கேரள அரசும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை சுட்டிக்காட்டி, மாநில உரிமைகளுக்காக ஓரணியில் திரள்வது காலத்தின் கட்டாயம் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.வி.செழியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களாட்சியையும் மாநிலங்களின் கல்வி சுயாட்சியையும் சிதைக்க நினைக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஒன்றாக நின்று பேராட வேண்டிய நேரமிது. மாநில அரசு இதுவரை உருவாக்கி வளர்த்து வைத்துள்ள பல்கலைக்கழகங்களை யுஜிசி வாயிலாகக் கைப்பற்றி, நமது கல்வி வளர்ச்சியைத் தடுக்க முயல்கிறது மோடி அரசு.
கல்வி சார்ந்த உரிமைகள் அரசியலமைப்பின் ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளபோது மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக அறிவிப்பை வெளியிட்டிருப்பது, யுஜிசியின் அதிகார வரம்பை மீறிய அத்துமீறல் நடவடிக்கை. மத்திய அரசின் கைப்பாவையாக யுஜிசி மாறியுள்ளது.
மத்திய அரசின் யுஜிசி விதிகளை ஏற்காவிட்டால், மாணவர்கள் வாங்கும் பட்டங்கள் செல்லாது; யூஜிசி திட்டங்களில் பங்கேற்க முடியாது; பல்கலைக்கழகங்களின் சட்ட அங்கீகாரம் செல்லாது என்றெல்லாம் யூஜிசி அறிவித்திருப்பது நேரடியாக தமிழக மாணவர்களின் கல்வி மீது தொடுக்கப்பட்ட போர்.
தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திடாவிட்டால் நிதி தரமாட்டோம் என விதிகளை வகுக்கின்றனர். இதற்கெல்லாம் திமுக அரசு அஞ்சாது. துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசின் உரிமையை மறுப்பதுடன், கல்வியாளர்கள் அல்லாதோரை துணைவேந்தர்களாக நியமிக்கலாம் என்றும், தனது அடிப்படை கல்வித் தகுதியில் இருந்து மாறுபட்ட பாடத்தில் முனைவர் பட்டமோ அல்லது நெட், செட் தகுதி பெற்றவர்களோ பேராசியர்கள் ஆகலாம் என யூஜிசி வரைவறிக்கை தெரிவித்திருப்பது கல்வித் துறையைச் சீரழித்து மாணவர்களின் கல்விக் கனவைப் பாழாக்கிவிடும்.
இதன் ஆபத்தை உணர்ந்துதான் வரைவறிக்கைகளை திரும்பப்பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார். மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதமும் எழுதினார். அதேபோல், பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் தமிழகத்துடன் இணைந்து சட்டப்பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்று கடிதம் எழுதினார்.
அதன்படியே, கேரள அரசும் யுஜிசி வரைவறிக்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அனைத்து மாநிலங்களும் மாநில உரிமைகளைக் காக்க ஓரணியில் திரண்டு நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம். யுஜிசியின் இந்த சர்வாதிகார செயலையும் நாம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
யுஜிசி தனது வரைவு அறிக்கையை திரும்பப்பெறும் வரை, திமுக அரசும், தமிழக மக்களும் தங்களது எதிர்ப்பில் இருந்து ஒரு நொடியும் பின்வாங்க மாட்டார்கள். மாநில உரிமைகளைப் பறிக்க நினைக்கும் மோடி அரசுக்கு எதிராக ஒன்றுபடுவோம், இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment