Published : 21 Jan 2025 02:12 PM
Last Updated : 21 Jan 2025 02:12 PM

‘சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை: பெரிய முதலைகளை கைது செய்க’ - அறப்போர் இயக்கம்

ஜகபர் அலி | கோப்புப்படம்

சென்னை: “சமூக செயற்பாட்டாளர் ஜகபர் அலி கொல்லப்பட்டதையும், கனிமவள கொள்ளை மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசையும் அறப்போர் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. ஜகபர் அலி கொலைக்கு காரணமான பெரிய முதலைகளை உடனடியாக காவல் துறை கைது செய்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்தி விரைவாக தண்டனை பெற்று தர வேண்டும்” என்று அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டவிரோத குவாரி முறைகேடுகளை, ஊழல்களை எதிர்த்து போராடி வந்த புதுகோட்டையை சேர்ந்த ஜகபர் அலி கொல்லப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதியில் அவர் தொடர்ந்து சட்டவிரோத குவாரி ஊழல் முறைகேடுகளை எதிர்த்தும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் போராடி வந்துள்ளார் என்பதும், அப்படிபட்ட ஒரு மிகப் பெரிய சட்டவிரோத கனிமவள கொள்ளையை குறித்து புகார் கொடுத்த சில நாட்களில் அவர் கொல்லப்பட்டு இருக்கிறார் என்பது அரசின் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டை காட்டுகிறது.

முக்கியமாக, சமூக வலைதளங்களில் சுற்றி வரும் ஒரு வீடியோவில், ஒரு நிறுவனம் மிகப் பெரிய சட்டவிரோத கனிமவள கொள்ளையில் ஈடுபட்டதாகவும், இது குறித்து அவர் தாசில்தார், ஆர்டிஓ, டிஆர்ஓ, ஆட்சியர், கனிமவளத் துறை என அனைவருக்கும் புகார் கொடுத்ததாகவும், தாசில்தார் அந்த தகவலை அந்த நிறுவனத்திடமே கசிய விட்டதாகவும் தெரிவிக்கிறார். மேலும், அந்த நிறுவனம் மீண்டும் சக்கை கற்களை பதுக்கி வைத்த இடத்தில் இருந்து, அவர்கள் குவாரியிலேயே கொண்டு போய் கொட்டி வருவதாகவும் தெரிவித்தார். இதன் பிறகு தற்பொழுது அவர் கொல்லப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளி வந்துள்ளது.

மேலும், லாரி ஓட்டுநர் உள்பட 4 பேரை கைது செய்துள்ளதாக அறிகிறோம். ஆனால் கொலைக்கு காரணமான பெரிய முதலைகள் யார்? ஏன் அரசால் அவர்களை இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லையா? அல்லது கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க விருப்பமில்லையா? அரசு இது போன்ற சட்டவிரோத கனிமவள கொள்ளையை தொடர்ந்து ஊக்குவிப்பதும், அரசில் உள்ள அதிகாரிகள் கனிமவள கொள்ளைக்கு குவாரி அதிபர்களுடன் கூட்டு சதியில் ஈடுபடுவதும் இது போன்ற கொலைகளுக்கும் தமிழகம் முழுக்க மக்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களுக்கும் முக்கிய காரணமாக அமைகிறது. இதுபோன்று நம் மண்ணின் வளங்களை காக்கவும், ஊழல்களை தடுக்கவும் போராடும் ஆர்வலர்கள் தமிழ்நாடு முழுக்க பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர்.

அவர் கொலைக்கு காரணம் தமிழக அரசின் சட்டவிரோத குவாரி ஆதரவு கொள்கை தானே? மேலும் அவர் வீடியோவில் குறிப்பிட்டவர்கள் மீது மாவட்ட நிர்வாகமோ, கனிமவளத் துறையோ சட்டப்படி நடவடிக்கை எடுத்து இருந்தால், அவரை காப்பாற்றி இருக்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் காவல்துறையும், உளவுத் துறையும் இது போன்று அநீதிக்கு எதிராக போராடும் மக்களின் போராடும் உரிமைகளை நசுக்கி ஆளும் கட்சிக்கு வேலை செய்வது தான் சட்ட ஒழுங்கை காப்பாற்றும் வேலை என்பது போல் வேலை செய்து வருவது அபத்தம். மாறாக, இது போன்ற அநீதிகளுக்கு எதிராக போராடும் உயிர்களை பாதுக்காப்பதும், அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சமூக விரோதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுமே தமிழகத்தின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை தடுக்கும் என்று உணர வேண்டும். காவல் துறையின் அமைச்சர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தின் இந்த சீரழிவுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

சமூக செயற்பாட்டாளர் ஜகபர் அலி கொல்லப்பட்டதையும் கனிமவள கொள்ளை மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசையும் அறப்போர் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
ஜகபர் அலி கொலைக்கு காரணமான பெரிய முதலைகளை உடனடியாக காவல் துறை கைது செய்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்தி விரைவாக தண்டனை பெற்று தர வேண்டும்.
ஜகபர் அலி சொன்ன புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், மேலும் அதை குவாரி அதிபருக்கே கசிய விட்டவர்கள் என அனைத்து அதிகாரிகள் மீதும் உடனடியாக துறை மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் அரசின் உள்ளும், வெளியும் முறைகேடுகள் மற்றும் ஊழல்களை எதிர்த்து குரல் கொடுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆர்வலர்கள் உயிரை பாதுகாக்க விசில் புளோயர்ஸ் பாதுகாப்பு (Whistleblowers Protection) சட்டத்தை அரசு கொண்டு வர வேண்டும். கனிம வளத்துறை கனி மவளங்களை கொள்ளை அடிப்பதற்காகவே செயல்படும் துறையாக இயங்கி வருகிறது. எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ள இந்த துறை சீரமைக்கப்பட வேண்டும். சட்டவிரோத கனிமவள கொள்ளைகள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை நடவடிக்கை எடுக்காத அமைச்சர் துரைமுருகனை அமைச்சர் பதவியில் இருந்து தூக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். வாசிக்க > திருமயம் அருகே சமூக ஆர்வலர் லாரி ஏற்றி கொலை: குவாரி உரிமையாளர்கள் உட்பட 4 பேர் கைது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x