Published : 21 Jan 2025 02:02 PM
Last Updated : 21 Jan 2025 02:02 PM
சென்னை: தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. இது குறித்து விவசாயிகள் கூறும்போது, சம்பா பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்த நிலையில், கடந்த மாதம் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்டது. அதில் இருந்து மீண்டு வந்த விவசாயிகள், நெற்பயிர்களில் நோய் தாக்குதல் தென்பட்டது. இன்னும் 2 வாரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பெய்த மழையால் பாதித்து, பாதி நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து கிடக்கிறது.
தற்பொழுது அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் மன வேதனையில் உள்ளனர். எனவே அதிகாரிகள் இப்பகுதிகளை மீண்டும் ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் 22 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிர் செய்யப்பட்ட நெற்பயிர்கள் முற்றிலும் மழையால் பாதிக்கப்பட்டு, மிகப்பெரிய சேதம் அடைந்துள்ளது. விவசாயிகள் அனைவரும் கண்ணீர் விட்டு அழும் அவலம் மனதிற்கு வேதனையளிக்கிறது. ஒரு குழந்தையை வளர்ப்பது போல் பார்த்து, பார்த்து வளர்க்கின்றனர். எனவே விவசாயிகள் நல்லா இருந்தால் தான் இந்த நாடு நல்லா இருக்கும்.
நமக்கு சோறு போடும் விவசாயிகளுக்கு ஒரு பிரச்சினை என்றால், அரசாங்கம் அவர்களுக்கு துணை நிற்க வேண்டும். அவர்கள் சேற்றில் கால் வைத்தால்தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். ஏற்கெனவே பெஞ்சல் புயல் மழை வெள்ளத்தால் டெல்டா பகுதி முழுவதும் விவசாயிகள் பாதிப்படைந்தனர். அதற்கான நிவாரண தொகையை இதுவரை இந்த அரசு கொடுக்கவில்லை. தஞ்சை, மயிலாடுதுறையில் மீண்டும் மழை சேதத்தால் 22 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் முற்றிலும் அழிந்து, விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
“உரலுக்கு ஒரு பக்கம் இடி என்றால், மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல்” எல்லா பக்கமும் விவசாயிகள் பாதிக்கக்கூடிய நிலை இருக்கின்றது. 22 சதவீதம் ஈரப்பதத்தோடு நெற்பயிரை இந்த அரசாங்கம் கொள்முதல் செய்ய வேண்டும். எனவே இந்த அரசு உடனடியாக விவசாயிகளின் கஷ்டத்தையும், வேதனையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என தேமுதிக சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
அதைபோல் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். “நானும் டெல்டா காரன் தான்” என்று சொல்லும் தமிழக முதல்வர் உண்மையில் விவசாயிகளுக்கு உற்ற நண்பராக இருந்து, டெல்டா பகுதி விவசாயிகளின் கடினமான இந்த நேரத்தில் காப்பாற்ற வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment