Published : 21 Jan 2025 01:52 PM
Last Updated : 21 Jan 2025 01:52 PM
சென்னை: ஆர்.கே.நகர் காவல் நிலையம் முன்பாக நடைபெற்ற கூலித் தொழிலாளி தற்கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, காவலர்கள் அலட்சியமாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தின் முன்பாக, பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் உடல் முழுவதும் எரிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
புளியந்தோப்பு பகுதியில் பட்டறை ஒன்றில் பணிபுரியும் சிலரால் தனது உயிருக்கு ஆபத்தான சூழல் நிலவுவதாகக் கூறி ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் கூலித் தொழிலாளி அளித்த புகாரை ஏற்க மறுத்ததோடு, அவரை தரக்குறைவாக நடத்தியதே தற்கொலை முயற்சிக்கான முக்கிய காரணம் என கூறப்படுகிறது. மக்களின் குறைகளையும், துன்பங்களையும் போக்கி உரிய பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல் துறை, ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மாறியிருப்பதே இதுபோன்ற துயரச் சம்பவங்கள் காவல் நிலையம் முன்பாகவே அரங்கேற காரணமாக அமைந்துள்ளது.
ஏற்கெனவே, திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் காவல் நிலைய சித்ரவதைகளும், மரணங்களும் அதிகரித்து வருவதாக சொல்லப்படும் சூழலில், தற்போது புகார் அளிக்க வருவோரையும் தொடர்ந்து தரக்குறைவாக நடத்தி அலட்சியமாக செயல்படும் ஒரு சில காவலர்களால் ஒட்டுமொத்த காவல்துறை மீதும் மக்கள் மத்தியில் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
எனவே, ஆர்.கே.நகர் காவல் நிலையம் முன்பாக நடைபெற்ற கூலித் தொழிலாளி தற்கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, காவலர்கள் அலட்சியமாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment