Published : 21 Jan 2025 01:16 PM
Last Updated : 21 Jan 2025 01:16 PM
புதுச்சேரி: புயல், மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை மூலம் கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்க வேண்டிய நிவாரணத்தை புதுச்சேரி அரசு வழங்காத நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி எதிர்க்கட்சித்தலைவர் சிவா தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் மனு கொடுத்தனர்.
புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வி. அனிபால் கென்னடி, எல். சம்பத் ஆகியோர் இன்று நண்பகலில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை ராஜ்நிவாசில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மாநிலத்தில் 2007–ஆம் ஆண்டு போட்டித்தேர்வு மூலம் தேர்வு பெற்று பணியில் சேர்ந்து இதுநாள் வரை பணியாற்றி வரும் ஊர்க்காவல் படை வீரர்கள் தங்களுக்கு குரூப்–சி அல்லது குரூப்–டி பிரிவில் அரசு பணி வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தினக்கூலி ஊழியர்களாக பணியாற்றும் ஊர்க்காவல் படை வீரர்களுக்கு என்று எவ்வித பணிப்பலனோ, விடுமுறையோ, அரசு சலுகைகளோ கிடைப்பதில்லை என்பதை தாங்கள் அறிவீர்கள். இப்படி அரசின் எந்த சலுகையும் பெற முடியாமல் ஏன் வங்கிக்கடன் கூட பெற முடியாமல் அவதியுறும் மேற்கண்ட படை வீரர்கள் 40 வயதை கடந்துவிட்டதாலும், அரசு விதிப்படி போதிய உடல்தகுதி மற்றும் 12–ஆம் வகுப்பு தேர்ச்சியும் இல்லாததாலும் காவலர், தீயைணைப்பு, ஜெயில் வார்டன் போன்ற பணிகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
ஆகவே, ஊர்க்காவல் படை வீரர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு கிராம உதவியாளர் பணிவாய்ப்பு மட்டுமே. அதுவும் தற்பொழுது பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் அச்சத்தை போக்கும் விதத்தில் ஆளுநர் அந்த கோப்புக்கு அனுமதி தரவேண்டும்.
புதுச்சேரி அரசின் உள்ளாட்சித் துறையில் கடந்த 2011–ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணியமர்த்தப்பட்ட 196 தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான கோப்புக்கு ஆளுநர் ஒப்புதல் தந்தும் இன்னும் அவர்களுக்கு பணி ஆணை வழங்காமல் உள்ளனர். விரைந்து நிரந்தர பணி ஆணை வழங்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணம் அறிவித்து வழங்கி இருந்தாலும் கூட, புயல், மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை மூலம் கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்க வேண்டிய நிவாரணத்தை புதுச்சேரி அரசு வழங்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இந்த ஆண்டும் உடமைகளை இழந்து வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும் அந்த மக்களுக்கான நிவாரணத்தை உடனடியாக வழங்க துணைநிலை ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment