Published : 21 Jan 2025 12:43 PM
Last Updated : 21 Jan 2025 12:43 PM
சென்னை: "பட்டியலின சிறுவனை கடுமையாக தாக்கி வன்கொடுமை செய்த குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்திட வேண்டும். இது போன்ற சாதி ரீதியிலான தாக்குதல்கள் தொடர்வதை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு தடுத்திட வேண்டும்" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், சங்கம்பட்டியை சேர்ந்த பாண்டியராஜன், ஈஸ்வரி ஆகியோரின் மகன் ஆதிசேஷன் (வயது) 17. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சங்கம்பட்டியில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் கிராமத்தில் சிறுவர்களுடன் சேர்ந்து ஆதிசேஷன் நடனம் ஆடியுள்ளார்.
அப்போது ஏற்பட்ட சிறிய மோதலில் பிற்படுத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு முகத்தில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிசேஷனைத் தேடி சென்றவர்கள் அவர் அங்கு இல்லாத நிலையில் அவரது வீட்டின் கதவுகளைச் சேதப்படுத்தி மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். தான் தாக்கப்படுவோம் என்ற அச்சத்தில் ஆதிசேஷன் வெளியூர் சென்று விட்டார்.
சில நாட்களுக்கு முன்பு ஆதிஷேசன் சங்கம்பட்டிக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் 16-01-2025 அன்று ட்ரம் செட் அடிக்கும் வேலைக்காக உசிலம்பட்டி சென்ற ஆதிசேஷனை சங்கம்பட்டியைச் சேர்ந்த கிஷோர், உக்கிரபாண்டியன், மணிமுத்து, பிரம்மா, சந்தோஷ், நித்திஷ் ஆகிய ஆறு பேரும் இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்து சங்கம்பட்டி அருகே உள்ள முத்தையா கோயில் கண்மாய்கரையில் வைத்து கடுமையாக தாக்கியதோடு சிறுவன் மீது சிறுநீரும் கழித்துள்ளனர்.
மேலும் பிற்படுத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுவனின் காலில் விழ வைத்தும், தவழ்ந்து செல்ல வேண்டும் என்றும் சாதிய வன்மத்துடன் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் மீண்டும் ஊர் பக்கம் தலை காட்டினால் கொலை செய்யாமல் விடமாட்டோம் எனவும் மிரட்டி அனுப்பி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து 17-01-2025 அன்று தனது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் ஆதிசேஷன் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் 256(b), 351(2) மற்றும் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் 3(1)(r),3(1)(S) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மணிமுத்து, நித்திஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த காட்டுமிராண்டித்தனமான வன்கொடுமைச் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. பட்டியலின சிறுவனை கடுமையாகத் தாக்கி வன்கொடுமைகள் செய்த குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்திட வேண்டும்.
இது போன்ற சாதி ரீதியிலான தாக்குதல்கள் தொடர்வதை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு தடுத்திட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவருக்கு உரிய நிவாரணம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...