Published : 21 Jan 2025 11:49 AM
Last Updated : 21 Jan 2025 11:49 AM

சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு ரூ.1 கோடியில் திருவுருவ சிலைகள் - நாளை அடிக்கல் நாட்டுகிறார் மு.க.ஸ்டாலின்

சென்னை: மருது சகோதரர்களுக்கு சிவகங்கையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் திருவுருவச் சிலைகள் அமைக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜன. 22) அடிக்கல் நாட்ட உள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை (22.1.2025) சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்களுக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் சிவகங்கையில் அமையப்பெறும் திருவுருவச் சிலைகளுக்கு அடிக்கல் நாட்டி, சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களுக்கு ரூ.50 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையினைத் திறந்துவைக்கிறார்கள்.

ஸ்டாலின் பொறுப்பேற்ற கடந்த மூன்றரை ஆண்டுகளில், நாட்டிற்காகவும், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்ட பெருமக்களின் தியாகங்களைப் போற்றி அவர்களுடைய சிலைகளையும் மணிமண்டபங்களையும், அரங்கங்களையும் அமைத்து வருங்கால இளைஞர்கள் அறிந்து உணர்ந்து பின்பற்றும் வண்ணம் 10க்கும் மேற்பட்ட நினைவரங்கங்களையும் 36 திருவுருவச் சிலைகளையும் திறந்துவைத்துள்ளார். மேலும் பல சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், தியாகிகளுக்குமான நினைவுச் சின்னங்களையும் அமைத்து வருகிறார்.

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் இந்திய விடுதலைப் போரில் தங்களின் இன்னுயிரை ஈந்தும் சொத்து சுகங்களைப் பறிகொடுத்தும், பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட தமிழ்நாட்டைச் சார்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் போற்றிப் பெருமைப்படுத்துகின்ற வகையில், கருணாநிதி ஆட்சியில் திறக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான சிலைகளும், கட்டப்பட்ட மணிமண்டபங்களும் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

இந்திய விடுதலைப் போரில், சிவகங்கை மாவட்டத்தில் தோன்றிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாமன்னர்கள் மருது சகோதரர்கள், வீரமங்கை வேலுநாச்சியார், வீராங்கனை குயிலி, வாளுக்கு வேலி அம்பலம் ஆகியோரின் பங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்களுக்கு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் திருப்பத்தூரில் மணிமண்டபத்துடன் கூடிய சிலைகள் திறந்து வைக்கப்பட்டுப் பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் வீரமங்கை வேலுநாச்சியாரின் படைத் தளபதியாக விளங்கிய வீரத்தாய் குயிலி அவர்களின் நினைவைப் போற்றுகின்ற வகையில், ரூ. 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட திருவுருவச் சிலையினை மு.க.ஸ்டாலின் கடந்த 9.10.2024 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.

சிவகங்கைச் சீமையை ஆண்ட மாமன்னர்கள் மருது சகோதரர்களுக்கு சிவகங்கையில் சிலை அமைத்து பெருமை சேர்த்திடவேண்டும் என்று பல்வேறு தரப்பினரால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அந்தக் கோரிக்கைகளை ஏற்று, அம்மாமன்னர்களுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில், சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் உள்ள வீரமங்கை வேலுநாச்சியார் நினைவிடம் அருகில் ரூ.1 கோடியே 6 இலட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்படவிருக்கும் புதிய திருவுருவச் சிலைகளுக்காக நாளை (22.1.2025) சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகின்ற அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

வீறு கவியரசர் முடியரசன் அவர்கள் தேனி மாவட்டம் பெரியகுளம் சுப்பராயலு சீதாலட்சுமி இணையருக்கு 1920-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 7-ஆம் நாள் பிறந்தார். தனது இயற்பெயரான துரைராசுவை முடியரசன் என்று மாற்றிக் கொண்டவர். பெரியார், அண்ணா, கருணாநிதி, பாரதிதாசன் ஆகியோரால் பாராட்டப்பட்ட முடியரசன் அவர்களுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் திருவுருவச் சிலைக்கும் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

மாமன்னர் மருது பாண்டியர்களின் உற்ற நண்பராக விளங்கிய சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் அவர்கள் தென் தமிழ்நாட்டில் கி.பி.18ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்களின் எதேச்சாதிகாரத்தை எதிர்த்துப் போரிட்டவர். அவர் பாகனேரி என்ற சிற்றூரின் தலைவராவார். அன்றைய காலகட்டத்தில் பாகனேரி என்பது 20க்கும் மேற்பட்ட சிற்றூர்களைக் கொண்ட ஒரு பகுதியாகும். தமிழர்களின் தொன்மையான போர்க் கலைகளில் குறிப்பாக ஈட்டி எறிதல் மற்றும் வளரி உள்ளிட்ட பல போர்க் கருவிகளைத் திறம்படக் கையாள்வதிலும் வல்லவர். மருதுபாண்டியர்களின் உற்ற நண்பராகவும் விளங்கியவர். வீரமங்கை வேலுநாச்சியாருடன் இணைந்து வெள்ளையர்களுக்கு எதிரான பல்வேறு போர்களைத் திறம்பட எதிர்கொண்டவர் என்று சிவகங்கை சரித்திர அம்மானையில் பக்கம் 151-இல் குறிப்பிடப்படுகிறது. நேரிடையாக இவரை வெல்ல முடியாத ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி முறையில் கத்தப்பட்டு என்கின்ற ஊரில் 1801ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 21–ஆம் நாள் கொன்றனர்.

அந்தச் சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்குவேலி அம்பலத்தின் நினைவைப் போற்றி அவருக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில், சிவகங்கை மாவட்டத்தில் அன்னாரின் வாரிசுகள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய நகரம்பட்டியில் ரூ.50 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையினையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துச் சிறப்பிக்கிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x