Published : 04 Jul 2018 04:10 PM
Last Updated : 04 Jul 2018 04:10 PM
ரயில்களில் மற்ற பயணிகளுக்கு வழங்கும் டீ, காபி மற்றும் உணவுகளே கிடைப்பதால் அதை சாப்பிடும் சர்க்கரை நோயாளிகளுக்கு அவர்களுடைய சர்க்கரை அளவு உயர்ந்து உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்திய ரயில்வே 1,27,760 கிமீ நீள ரயில்வே பாதையினைக் கொண்ட உலகின் மூன்றாவது மிகப்பெரிய ரயில்வே அமைப்பாகும். 7,500-க்கும் மேற்பட்ட பெரிய, சிறிய ரயில் நிலையங்கள் உள்ளன. ஒரு நாளைக்கு தினமும் 2 கோடி பயணிகள், ரயில்களில் பயணிக்கின்றனர். தற்போது அனைத்து ரயில்பாதைகளும் மின் பாதையாக மாற்றப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் ரயில்வே நிலையங்கள், சிக்னல்கள், முனையங்கள், சரக்கு ரயில்பாதைகள் உள்ளிட்ட அனைத்தும் நவீனமயமாக்கும் பணி துரிதமாக நடைபெறுகின்றன. ஆனால், ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ரயில்வே நிர்வாகம் இன்னும் முழுமையாக ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது.
குறிப்பாக ரயில்பெட்டிகளில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமாக இல்லை. சுகாதாரமான குடிநீர் கிடைப்பது இல்லை. ரயில்களில் வழங்கப்படும் உணவு தரமில்லாமல் இருப்பதாகவும், ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவு பண்டங்கள் விலை அதிகமாக இருப்பதாகவும் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.
அதுபோல், ரயில்களில் பயணிகளுக்கான உணவுகள் சராசரிப் பயணிகளை மனதில் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. ஆனால், ரயில்களில் செல்லும் பயணிகளில் குறிப்பிட்ட சதவீதம் பேர் சர்க்கரை நோயாளிகளாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள். அவர்களுக்கான உணவுகள் ரயில்களில் கிடைப்பதில்லை.
இதுகுறித்து தென்னக ரயில்வே பயணிகள் சங்க பொதுச்செயலாளர் கே.பத்மநாதன் கூறுகையில், “இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கைப்படி 62 மில்லியன் இந்தியர்கள் சர்க்கரை நோயால் வயது வித்தியாசமின்றி பாதிக்கப்பட்டுள்ளார்கள். சராசரி கணக்குப்படி 42 வயதிற்கு மேல் சர்க்கரை நோயால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். வருடத்திற்கு ஒரு மில்லியன் மக்கள் சர்க்கரை நோயால் மரணமடைகிறார்கள். அவர்கள், காலை, பகல், இரவு நேரங்களில் புறப்பட்டு மறுநாளோ அல்லது அதற்கு அடுத்த நாளோ 8 மணி நேரம் முதல் 24 மணி நேரம், 96 மணி வரையும் வரை நீண்ட தூரம் பயணம் செய்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்கிறார்கள்.
இந்த ரயில் பயணிகள் ரயிலை விட்டு கீழே இறங்கி ஒய்வு எடுக்க வாய்ப்பில்லை. சாப்பிடவும் நேரம் கிடைப்பதில்லை. இவர்களுக்கு ரயில்களில் மற்ற பயணிகள் குடிக்கும் டீ, காபி, பால், உணவுகளே வழங்கப்படுகிறது. ஏற்கெனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இவர்களால் இந்த ஒரு நாள், இரண்டு நாள், 4 நாள் ரயில் பயணத்தில் தொடர்ந்து சர்க்கரை அதிகம் உள்ள டீ, காபி, உணவுகளை சாப்பிடும்போது சர்க்கரை அளவு உயர்ந்து உடல் நலக்குறைவு ஏற்படுகிறது.
பலர் சர்க்கரை நோயால் ரயில்களிலே இறக்கும் பரிதாபமும் நேரிடுகிறது. அதனால், இந்திய ரயில்வே நிர்வாகம், ரயில்களில் பயணிக்கும் ரயில் பயணிகளுக்காக சர்க்கரை இல்லாத டீ, காபி, பால் மற்றும் உணவு வகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ரயில்களில் பயணிக்கும் சர்க்கரை நோயாளிகளுடைய நீண்ட நாள் கோரிக்கை.
ரயில்வே நிர்வாகம் ரயில் பயணிகளுடைய உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். அதனால், ரயில் நிலையங்களில் உள்ள கடைகள், ஸ்டால்கள், ஹோட்டல்களில் சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு வகைகளை குறிப்பிட்ட அளவு தினமும் தயார் செய்து வழங்க வேண்டும். ரயில்களில் பயணம் செய்யும் பெரும்பாலானவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்க வாய்ப்புள்ளதால் அந்த உணவுகள் மீதமாகி கெட்டுப்போக வாய்ப்பில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT