Published : 25 Jul 2018 04:50 PM
Last Updated : 25 Jul 2018 04:50 PM
இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நாடு கடத்தும் புதிய சட்டத்தை மத்திய அரசு தலையிட்டு நிறுத்திவைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் கடந்த 4 ஆண்டுகளில் 189 படகுகளைக் கைப்பற்றி அதிலிருந்த 1,000க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். மீனவர்களின் பல்வேறு கட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளினால் அவ்வப்போது கைது செய்யப்பட்ட மீனவர்கள் சிறைவாசத்திற்குப் பின்னர் விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால் படகுகள் மட்டும் விடுவிக்கப்படவில்லை.
இலங்கை கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகள், படகு மூலம் மீன்பிடிக்கும் உள்நாட்டு மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவதுபோல, இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கும் வெளிநாட்டுப் படகுகளுக்கும் தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதற்கான புதிய சட்டம் இலங்கை மீன்வளத் துறையின் மூலம் கடந்த ஜனவரி 24, 2018 அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டத்தின் வாயிலாக 15 மீட்டர் நீளமுடைய படகுக்கு இலங்கை மதிப்பு ரூ.50 லட்சம் (இந்திய மதிப்பு ரூ.20 லட்சத்து 69,915), 15 முதல் 24 மீட்டர் நீளமுள்ள படகுக்கு ரூ.2 கோடி (இந்திய மதிப்பு ரூ.82 லட்சத்து 79,661), 24 மீட்டர் முதல் 45 மீட்டர் நீளமுள்ள படகுக்கு ரூ.10 கோடி (இந்திய மதிப்பு ரூ.4 கோடியே 13 லட்சத்து 98,305), 45 முதல் 75 மீட்டர் நீளமுள்ள படகுக்கு ரூ.15 கோடி (இந்திய மதிப்பு ரூ.6 கோடியே 20 லட்சத்து 97,457), 75 மீட்டருக்கும் அதிகமுள்ள படகுக்கு ரூ.17.5 கோடி வரையிலும் (இந்திய மதிப்பு ரூ.7 கோடியே 24 லட்சத்து 47,033) அபராதமும் அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். தற்போது இலங்கை எல்லைக்குள் சிறைப்பிடிக்கப்படும் தமிழக படகுகளுக்கு இந்தப் புதிய சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு கடந்த ஒரு மாத காலமாக யாழ்பபாணம் நீதிமன்றங்களில் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
இதனடிப்படையில் கடந்த ஜூலை 4 அன்று புதன்கிழமை ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு விசைப்படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 12 மீனவர்களும், ஜூலை 8 அன்று மண்டபத்தைச் சேர்ந்த 4 விசைப்படகு மீனவர்களும் ஜூலை 23 அன்று தஞ்சாவூர் மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் மீதும் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் வெளிநாட்டுப் படகுகளுக்கும் அபராதம் மற்றும் தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்து 2 ஒவ்வொரு மீனவர்கள் மீதும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மீனவர்களுக்கும் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 7 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்களை இந்தியாவிற்கு நாடு கடத்தவும் (திருப்பி அனுப்பவும்) இந்த மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உடனடியாக அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (சி.ஐ.டி.யு) பொதுச்செயலாளர் சி.ஆர். செந்தில்வேல் கூறுகையில், ''பாக் நீரிணைப் பகுதியை நம்பி தமிழகத்தின் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், திருவாரூர் ஆறு மாவட்ட மீனவர்கள் உள்ளனர். இப்பகுதியில், சுமார் 6,000 விசைப்படகுகள் உள்ளன. இவற்றை நம்பியுள்ள இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மீனவர்கள் குறுகிய எல்லை, குறைந்துவரும் மீன்வளம் போன்றவற்றால் வருடத்தில் 50 நாள்களே கடலுக்குச் செல்கின்றனர். ஒவ்வொரு நாட்டுக்கும் கடல் எல்லைகள் வகுக்கப்பட்டிருந்தாலும், அதில் வளரும் மீன் இனங்கள் ஒரே இடத்தில் இருப்பதில்லை. எனவேதான், மீன்கள் இருக்கும் இடத்தைத் தேடி மீனவர்கள் செல்லும் நிலை உள்ளது.
இதில் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்கும் வகையில், இந்திய அரசு மாற்றுத்தொழிலாக ஆழ்கடல் மீன்பிடிப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன்படி, ஆண்டுக்கு 500 படகுகள் வீதம் நான்கு ஆண்டுகளில் இரண்டாயிரம் படகுகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்தத் திட்டம் தொடங்கி ஒரு வருடம் ஆன நிலையில், 16 படகுகளுக்கு மட்டுமே வேலை நடந்து வருகிறது. இதனால், நம் மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த இடங்களுக்குச் சென்று மீன்பிடிப்பது தவிர்க்க முடியாதது. இலங்கை அரசின் புதிய சட்டத்தால் மீன்பிடித் தொழிலே கேள்விக்குறியாகிவிடும். எனவே, மத்திய அரசு தலையிட்டு இலங்கை அரசின் இந்தச் சட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT