Published : 19 Jan 2025 05:29 PM
Last Updated : 19 Jan 2025 05:29 PM
ஈரோடு: “ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதோடு, வழக்குகளை போட்டு மிரட்டும் அராஜகம் நடக்கிறது.” என நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடக்கிறது. பிரதான கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், திமுக – நாம் தமிழர் கட்சி இடையே இருமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோர் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடந்த தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளைப் பெற்றதன் மூலம் நாம் தமிழர் கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்நிலையில், அக்கட்சிக்கு சின்னம் ஒதுக்குவது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படாததால், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரச்சாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், ஈரோடு பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில், இன்று காலை வாக்காளர்களைச் சந்தித்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை கூறி, திராவிடத்திற்கு மாற்று தமிழ்தேசியம் என்பதால் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 2023-ம் ஆண்டு ஈரோடு கிழக்கில் நடந்த இடைத்தேர்தலில், வாக்காளர்களை பட்டிகளில் அடைத்து வைத்து, பணம், பரிசுப்பொருள் கொடுத்து அராஜகம் நடந்தது. இந்த தேர்தலில் வாக்காளர்களைச் சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள நாம் தமிழர் கட்சிக்கு தொடர்ச்சியாக அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இரண்டு பேராகச் சென்று மக்களைச் சந்தித்து, திமுக ஆட்சியின் அவலத்தை சொல்வதற்கு கூட அனுமதி இல்லை. ஒலிப்பெருக்கி பயன்படுத்த காவல்துறை அனுமதி அளிப்பதில்லை.
இதனை மீறி, சட்டத்திற்கு உட்பட்டு தொடர்ந்து களத்தில் நிற்போம். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்றத் உறுப்பினர் அலுவலகம் கடந்த 10 ஆண்டுகளாக பூட்டி கிடக்கிறது. தேர்தலின் போது மட்டும் இவர்கள் மக்களைச் சந்திக்கின்றனர். மற்ற நேரங்களில் மக்களைச் சந்திக்க பயப்படுகின்றனர்.
வழக்குகளைப் போட்டு எங்களை மிரட்டுகிறது திமுக. மீது எவ்வளவு வழக்குகள் போட்டாலும் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம். இது போன்ற வழக்குகளால் மக்களின் ஆதரவு எங்களுக்கு பெருகும். நாம் தமிழர் கட்சிக்கு எதிராக சில அமைப்பினரை திமுக தூண்டி விடுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சீமானை பொதுக்கூட்டங்களில் பேச விடக்கூடாது என்பதுதான் காவல்துறையின் திட்டமாக உள்ளது. இது தொடர்பாக தேர்தல் பார்வையாளரைச் சந்தித்து மனு அளிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT