Published : 19 Jan 2025 01:07 PM
Last Updated : 19 Jan 2025 01:07 PM

“திமுக ஆட்சி அவலத்தை மறைக்கவே மத்திய அரசு மீது குற்றச்சாட்டு” - அண்ணாமலை பதிலடி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை | கோப்புப் படம்

சென்னை: “தமிழகத்துக்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. பிப்ரவரியில் தாக்கலாகும் மத்திய பட்ஜெட்டிலும் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கப்படும், திட்டங்கள் அறிவிக்கப்படும். இந்நிலையில் திமுக தனது ஆட்சி அவலத்தை மறைக்கவே மத்திய அரசின் மீது குற்றஞ்சாட்டுகிறது” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று காலை விருதுநகரில் பேட்டியளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழக அரசின் நிதி நிலைமை கட்டுக்குள் உள்ளது. மெட்ரோ திட்டங்கள் போல் பல்வேறு திட்டங்களுக்கும் மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காததாலேயே மாநில அரசுக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது. இருப்பினும் நிதிக் குழு பரிந்துரையின் வரம்பை மீறாமலேயே கடன் பெற்றுள்ளோம்.” என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அண்ணாமலை, “தமிழக அமைச்சர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட விஷயங்களை மட்டுமே மறக்கும் மறதி நோய் (‘செலக்டிவ் அம்னீஸியா’) வந்துவிட்டதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. தமிழகத்தின் எந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கவில்லை என்று சொல்லுங்கள். எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதற்கு சான்றாக நாடாளுமன்றத்தில் 36 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை மத்திய பாஜக அரசு சமர்ப்பித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ரூ.11 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்துக்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது.

சென்னை மெட்ரோ திட்டத்துக்கு ரூ.43 ஆயிரம் கோடி வாங்கிக் கொடுத்திருக்கிறோம். மாநில அரசு அறிவித்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கத் தேவையில்லை. இருப்பினும், திமுகவின் அரசியலால் மக்கள் பாதிக்கப்படக் கூடாதே என்றே மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

எனவே, குற்றஞ்சாட்டுவதற்கு முன்னதாக திமுக அமைச்சர்கள் காதுகளையும், கண்களையும் திறந்து பார்க்க வேண்டும். அடுத்ததாக பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அதிலும் தமிழக அரசுக்கு திட்டங்கள் அறிவிக்கப்படும், நிதி வரும். திமுகவினர் தங்கள் ஆட்சியின் லட்சணத்தை மறைப்பதற்காகவே தினமும் மத்திய அரசை குறை சொல்வதை முழு நேர வேலையாகக் கொண்டுள்ளனர்.” என்றார்.

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அண்ணாமலை, “இந்தியாவிலேயே இப்படி ஒரு தேர்தல் எங்கும் நடந்திருக்காது. 2021-ல் ஒரு தேர்தல், அப்புறம் இடைத்தேர்தல், இப்போது மீண்டும் ஒரு இடைத்தேர்தல். இத்தனை தேர்தல்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் 3 தேர்தல். இத்தனை முறை வாக்களித்தால் மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது எப்படி நம்பிக்கை வருமா? வெறுப்பு தான் வரும். இப்போது வரக்கூடிய சட்டப்பேரவை உறுப்பினரின் பதவிக்காலம் 8 அல்லது 9 மாதங்கள் தான். அவர் தொகுதிக்கு என்ன செய்துவிட முடியும். நியாயப்படி தேர்தல் ஆணையம் இது போன்ற தேர்தல்களை நடத்தக்கூடாது. இந்தத் தேர்தல் எங்களைப் பொறுத்தவரை ஒரு வேண்டாத வேலை. நாங்கள் போட்டியிட்டு அதற்காக மக்கள் பட்டிகளில் அடைக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை.” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x