Published : 19 Jan 2025 08:43 AM
Last Updated : 19 Jan 2025 08:43 AM
வேலூர்: வேலூர் அருகே சோழவரம் கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் பங்கேற்ற காளைகள் ஓடுதளத்தில் சீறிப்பாய்ந்ததை பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் கண்டுரசித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் விழா கடந்த 15-ம் தேதி முதல் தொடங்கியது. ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு கிராமத்தில் எருதுவிடும் விழா என்ற அடிப்படையில் காவல் துறை பாதுகாப்புடன் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில், பனமடங்கி, கீழ்முட்டுக்கூர் மற்றும் புலிமேட்டில் நடைபெற்ற எருதுவிடும் விழாக்களில் போதிய முன்னேற்பாடுகள் இல்லாமல் இருந்ததாக சர்ச்சை எழுந்தது.
அரசாணையில் கூறிய விதிமுறைகளுடன் எருது விடும் விழாக்களை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். மேலும், விதிகளை மீறி எருதுவிடும் விழாக்களை நடத்தினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். அதன்படி, வேலூர் அடுத்த சோழவரம் கிராமத்தில் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. இதில், வேலூர், கணியம்பாடி, கண்ணமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 200-க்கும் அதிகமான எருதுகள் பங்கேற்றன.
நேற்று காலை 11 மணி முதல் ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. ஓடுதளத்தில் இடையூறுகள் இல்லாமல் எருதுகள் ஓடியதை பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். விழாவில் பார்வையாளர்கள் பகுதியில் நின்றிருந்தவர்கள் கூட்டத்தில் எருதுகள் புகுந்ததில் 3 பேர் காயமடைந்தனர். சோழவரம் கிராமத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment