Published : 16 Jul 2018 08:27 AM
Last Updated : 16 Jul 2018 08:27 AM
இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்து ஜவுளி உற்பத்தி மிகவும் பிரதானத் தொழிலாகவும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிலாகவும் இருந்து வருகிறது. தமிழகத்தில் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக சென்னையில் அதனை ஒட்டியுள்ள திருத்தணி, அரக்கோணம், குடியாத்தம், வேலூர், ஆரணி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் லுங்கி, சேலைகள் உற்பத்தி சிறு, குறு அளவில் அதிகமாக நடைபெற்று வருகிறது. நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, திருப்பூர்,கோவை போன்ற பகுதிகளும் ஜவுளி உற்பத்திக்கு பிரபலமானவை.
இந்நிலையில் சமீப நாட்களாக காட்டன் நூல் விலையானது தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. இது நூல் வர்த்தகத் தில் சரிவை ஏற்படுத்தியுள்ளதுடன், அது சார்ந்த தொழில் துறையினரையும் பாதிப்படையச் செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய விலை உயர்வு நடப்பு மாதம் வரை தொடர்ந்து கொண்டுள்ளது. ஏப்ரல் முதல் ஜூலை வரை கிலோவுக்கு ரூ.28 வரை அதிகரித்துள்ளதாக கூறப் படுகிறது.
நூல் வர்த்தகம் சரிவு
இதுதொடர்பாக சென்னை நூல் வர்த்தகர்கள் சங்க செயலாளர் எம்.லோகநாதன் கூறும்போது, “சென்னை, அதன் அருகேயுள்ள பகுதிகளுக்கு லுங்கி, சேலைகள் தயாரிக்கப் பயன்படும் 40, 60, 80-ம் எண் நூல்கள் அதிகளவில் விநியோகம் செய்து வருகிறோம். இதில் 80-ம் எண் நூல் மட்டும் கிலோவுக்கு ரூ.385-லிருந்து ரூ.420 வரை செல்கிறது. கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்ததை விட தற்போதைய நிலையில் அனைத்துவித நூல் களுக்கும் 7 சதவீதம் விலை அதிகரித்துள்ளது. விலை உயர்வால் எங்களுக்கு நடப்பு சீசனுக்கான விற்பனையில் 50 முதல் 60 சதவீதம் குறைந்து தேக்கம் ஏற்பட்டுள்ளது. நூல் விலை உயர்வுக்கு பஞ்சு விலை சரமாரியாக உயர்ந்ததே முக்கிய காரணம். மத்திய, மாநில அரசுகள் ஜவுளித்துறை மீது உரிய கவனம் செலுத்தி தொழில் துறையினரைக் காக்க வேண்டும்” என்றார்.
தற்போது 355 கிலோ கொண்ட ஒரு கேண்டி தரமான பஞ்சின் விலை ரூ.42 ஆயிரத்தில் இருந்து ரூ.49 ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளது. பஞ்சு உற்பத்தி குறையும்போது போதிய இருப்பை கையில் வைக்காமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதே பிரச்சினைக்கு காரண மாக பார்க்கப்படுகிறது.
தொழில் துறை பாதிப்பு
இதுதொடர்பாக அனைத்திந் திய நூல் வர்த்தகர்கள் சங்க செயலாளர் பி.குமார் நம்மிடம் கூறும்போது, “பஞ்சு விலை கேண்டிக்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை கடந்த 2 மாதங்களில் மட்டும் உயர்ந்துள்ளது. இதனால் நூலின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. விலை உயர்வைத் தடுக்க பஞ்சு ஏற்றுமதியைக் குறைத்து, இந்திய பஞ்சுக் கழகம் மூலமாக உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சீராக பஞ்சு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
நூல் விலை உயர்வால் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஏற்கெனவே எடுத்த ஆர்டர்களை அடக்க விலைக்குள் முடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். விலை உயர்வை ஈடுகட்ட கூடுதல் விலையை ஆர்டர் அளிப்போரி டம் கேட்டுப் பெற முடியாத நிலையில், கையிலிருந்து செலவு செய் யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள னர்.
இதுதொடர்பாக தென்னிந்திய காலர் சர்ட் மற்றும் சிறு தொழில் முனைவோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.எஸ்.பாபுஜி கூறும்போது, “நூல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவ தால் எடுத்த ஆர்டர்களை கையடக்க விலைக்குள் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய ஆர்டர்களை ஏற்க தொழில் துறையினர் அனைவரும் தயக்கம் காட்டும் நிலை உள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT