Published : 18 Jan 2025 12:17 PM
Last Updated : 18 Jan 2025 12:17 PM
காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராகப் போராடும் குழுவினரை வரும் 20-ம் தேதி சந்திக்க நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து, விஜய் வருகையை ஒட்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்தும் அக்கட்சியினர் கள ஆய்வில் இறங்கியுள்ளனர்.
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைகிறது. இதற்காக பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5133 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக பொதுமக்களின் விளை நிலங்கள், நீர் நிலைகள் என பல இடங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதால் பாதிக்கப்படும் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலுமாக கையகப்படுத்தப்படுவதால் அந்தப் பகுதிகளில் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் போராட்டம் 908 நாட்களாக நீடித்து வருகிறது. அந்த 13 கிராமங்களில் போலீஸார் குவிக்கப்பட்டு அந்த கிராமங்கள் போலீஸ் கட்டுக்குள் வந்தன.
போராட்டம் நடைபெறும் இடத்துக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உள்பட பலர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். விவசாய சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன.
தவெக தலைவர் விஜய் ஆதரவு: இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நடிகர் விஜய் கடந்த அக்டோபர் 27-ம் தேதி முதல் மாநாட்டை நடத்தினார். அப்போது பரந்தூர் விமான நிலையத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்று போராடும் மக்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றினார். இதற்கு விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் நன்றி தெரிவித்தனர். விஜய்யை சந்திக்கவும் நேரம் கேட்டிருந்தனர்.
சோர்ந்து போன மக்கள்: போராட்டம் 900 நாளை தாண்டி நீடித்த நிலையில் பொதுமக்கள் சோர்ந்து போயினர். பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து இருந்தாலும் அவர்கள் ஆதரவு சம்பிரதாயத்துக்கே இருப்பதாகவும், வலுவாக களத்தில் தங்களுடன் நிற்கவில்லை என்ற குறையும் பொதுமக்கள் மத்தியில் இருந்தது. அரசும் போராட்டத்தை கண்டுகொள்ளாத நிலையில் 1000 நாட்கள் போராட்டம் நடத்தி நிறைவு செய்துவிடலாம் என்றும், அடுத்த கட்டமாக சட்ட நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர். இருப்பினும் விடா முயற்சியாக நிலம் அளவைக்கு எதிர்ப்பு, கருணாநிதி நினைவிடத்தில் மனு கொடுக்க முயற்சி, சட்டப்பேரவை முற்றுகையிட முயற்சி, ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலம் என்ற பல்வேறு போராட்டங்களை பொதுமக்கள் மற்றும் போராட்டக் குழுவினர் நடத்தி வருகின்றனர். இதனால் பல வழக்குகளையும் சந்தித்துள்ளனர்.
மீண்டும் சுறுசுறுப்பாகும் போராட்ட களம்: இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போராடும் மக்களையும், போராட்டக் குழுவினரையும் சந்திக்க முடிவு செய்தார். இதற்காக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். கடந்த சில தினங்களாகவே அந்தக் கட்சியின் பொதுச் செயலர் ஆனந்த் உள்ளிட்டோர் விஜய் வருகைக்கான ஏற்பாடுகளை கவனித்து வந்தனர். இந்நிலையில் விஜய் வருவதற்கு வரும் 20-ம் தேதி அனுமதி காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
அம்பேத்கர் திடலில் கூட்டமா? இந்நிலையில் முழுமையாக கையகப்படுத்தப்படும் ஏகனாபுரம் கிராமத்தில் போராட்டக் குழுவினரையும், பொதுமக்களையும் விஜய் சந்திக்கிறார். இதில் 13 கிராமங்களில் இருந்து பாதிக்கப்படும் பொதுமக்கள், தமிழக வெற்றிக் கழகத்தினர் உள்பட பலர் பங்கேற்கின்றனர். இதற்காக ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை முன் உள்ள திடலில் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இடம் மட்டும் இன்று உறுதிப்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.சண்முகத்திடம் கேட்டபோது, “விஜய் வரும் 20-ம் தேதி பரந்தூர் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எந்த இடத்தில் மக்களை சந்தித்து பேசுகிறார் என்பது குறித்து இன்று தெரிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment