Published : 18 Jan 2025 01:37 AM
Last Updated : 18 Jan 2025 01:37 AM
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கும், சிலைக்கும் அரசு சார்பில் அமைச்சர்களும், பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான் எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பில் கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், எஸ்.எம்.நாசர் ஆகியோர் எம்ஜிஆர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா, துணைமேயர் மு.மகேஷ்குமார், பல்கலைக்கழக துணைவேந்தர் கே.நாராயணசாமி, தமிழ் வளர்ச்சித்துறை செயலர் வே.ராஜாராமன், செய்தி, மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் இரா.வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் எம்ஜிஆர் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 108 கிலோ கேக்கை வெட்டி, கட்சி நிர்வாகிகளுக்கு ஊட்டினார். அதைத்தொடர்ந்து, மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் ஏற்பாட்டில் அன்னதானம் மற்றும் நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக எம்ஜிஆர் மன்ற செயலாளர் சி.பொன்னையன், துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், மகளிரணி தலைவி பா.வளர்மதி, தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, அமைப்பு செயலாளர் டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர்கள் வைகைச்செல்வன், எஸ்.கோகுலஇந்திரா, பா.பென்ஜமின், நடிகை கவுதமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவின் முடிவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, "எம்ஜிஆர் - ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களின் புகழை யாராலும் அசைக்க முடியாது. துக்ளக் குருமூர்த்தி பேசாமல் இருக்க வேண்டும். இல்லையென்றால் வாங்கிக்கட்டிக் கொள்ள நேரிடும். கலைஞர் பன்னாட்டு மையம் அமைக்க ரூ.526 கோடி பணம் இருக்கிறது. பொங்கல் பரிசு கொடுக்க பணம் இல்லையா? இன்பநிதி, அவரது நண்பர்கள் ஜல்லிக்கட்டு பார்ப்பதற்காக ஆட்சியரை நிற்க வைத்து இருப்பது வேதனை அளிக்கிறது" என்றார்.
ஓபிஎஸ், சசிகலா: சென்னை அண்ணா சாலையில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், ஆர்.வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் எம்ஜிஆர் உருவப்படத்துக்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். தியாகராயநகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சு.திருநாவுக்கரசர், பெங்களூரு வா.புகழேந்தி உள்ளிட்டோர் எம்ஜிஆர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பிரதமர் புகழாரம்: பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘எம்ஜிஆர் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். ஏழைகளுக்கு அதிகாரமளிக்கவும், சிறந்த சமுதாயத்தை கட்டமைக்கவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளால் நாம் பெரிதும் உத்வேகம் அடைந்துள்ளோம்’ என குறிப்பிட்டுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்துக்காக உழைத்த தலைசிறந்த தேசியவாதியான எம்ஜிஆர் புகழைப் போற்றி வணங்குகிறோம்’ என பதிவிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘ஏழைகளின் தோழனாகவும், எளியவர்களின் விருப்பத்துக்குரியவராகவும் திகழ்ந்த எம்ஜிஆரின் பிறந்த நாளில், நினைவைக் கொண்டாடும் லட்சோபலட்ச இதயங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ்தள பக்கத்தில், ‘அளவற்ற வறுமையை தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றை சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார். அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார். அவரே தமிழக அரசியலின் அதிசயம் ஆனார். இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்கு பிறந்தநாள் வணக்கம்’ என பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment