Last Updated : 17 Jan, 2025 09:00 PM

 

Published : 17 Jan 2025 09:00 PM
Last Updated : 17 Jan 2025 09:00 PM

உள்துறை செயலருக்கு கடிதம் அனுப்பிய ஆர்.எஸ்.மங்கலம் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை

ராமநாதபுரம்: உள்துறை செயலாளருக்கு பணி செய்ய விருப்பமில்லை என கடிதம் அனுப்பிய ஆர்.எஸ்.மங்கலம் காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ராமநாதபுரம் சரக டிஐஜி அபிநவ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் காவல்நிலைய ஆய்வாளராக பணிபுரிபவர் சரவணன். இவர் கடந்த 11-ம் தேதி தமிழக உள்துறை செயலருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தில், ‘கடந்த 18.01.2008-ல் சார்பு ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டு 2020-ம் ஆண்டு ஆய்வாளராக பதவி உயர்வு அடைந்து காவல் துறையில் கடந்த 16 வருடங்களாக நன்முறையில் பணிபுரிந்து வருகிறேன். திருவாடானை காவல் உட்கோட்ட முகாம் அலுவலக எழுத்தர் தொடர்ந்து என்னிடம் கேட்காமல் ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு தன்னிச்சையாக தொடர்ந்து அலுவல்களை நியமித்து எனது நிர்வாகத்தில் தலையிட்டு நிர்வாக சீர்குலைவை ஏற்படுத்தி வருகின்றார். ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் ஒப்பளிக்கப்பட்ட காவலர்களில் 10 பேர் தமது அனுமதி இல்லாமல் அயல்பணியாக பணிபுரிந்து வருகின்றனர்.

ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலைய சரகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் காவல் ஆய்வாளரான எனது ஓட்டுநரை வேறு பணிக்கு வருமாறு ஆயுதப்படையில் இருந்து தன்னிச்சையாக எனது கவனத்துக்கு தெரிவிக்காமல் நேரடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இக்காவல் நிலையத்தில் 328 புலன்விசாரணை வழக்குகள், 162 குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் 247 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இதனால் வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய முடியாமல் வழக்குகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே செல்கிறது. என்னுடைய நிர்வாகத்தில் தலையிட்டு நிர்வாக சீர்குலைவை ஏற்படுத்துவதால் எனது காவல் ஆய்வாளர் பணியை திறம்பட செய்யமுடியவில்லை. இதனால் ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் தொடர்ந்து காவல் ஆய்வாளராக பணிபுரிய விருப்பமில்லை என்பதையும், மேலும் சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களில் தொடர்ந்து பணிபுரிய விருப்பமில்லை என்ற விபரத்தை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்’ என கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று ராமநாதபுரம் சகர டிஐஜி அபிநவ் குமார், ஒழுங்கு நடவடிக்கை காரணமாக ஆய்வாளர் சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x