Published : 17 Jan 2025 08:41 PM
Last Updated : 17 Jan 2025 08:41 PM
கோவை: “காங்கிரஸின் கூட்டணி கட்சியான திமுக ஆட்சி செய்யும் தமிழகத்தில், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளதுபடி, சட்டப்பேரவையில் தேசிய கீதத்தை முதலில் இசைக்க ஆளுநர் கூறினால் முடியாது என்கின்றனர். மறுபுறம் அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆபத்து என வெற்று கூச்சலிடுகிறார்கள்” என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 15-ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலக புதிய கட்டிட திறப்பு விழாவில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகே இந்தியா சுதந்திரம் அடைந்ததாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியிருப்பது தேசத் துரோகம். ஒவ்வொரு இந்தியரையும் அவமதிக்கும் செயல் என கூறியிருக்கிறார்.
1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் குஜராத் மாநிலத்தில் அன்னிய மத படையெடுப்பாளர்களால் இடிக்கப்பட்ட சோமநாதர் கோயில் புதிதாக கட்டப்பட்டது. அதற்கான முயற்சிகளை செய்தவர் அன்றைய துணை பிரதமர் சர்தார் வல்லபாய் பட்டேல். சோமநாதர் கோயில் மீண்டும் கட்டப்பட்டதன் மூலம், இந்தியாவின் கவுரவம் மீட்டெடுக்கப்பட்டது. இந்தியாவின் சுதந்திரம் முழுமை அடைந்தது.
அதுபோலதான் அன்னிய மத படையெடுப்பாளர்களால் இடிக்கப்பட்டு, ஆக்கிரமிப்பாளர்களின் பெயரில் கட்டப்பட்ட சர்ச்சைக்குரிய இடத்தை, 500 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு சட்டப்படி மீட்டு, அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. 500 ஆண்டு காலம் கத்தியின்றி, ரத்தமின்றி நடந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியைதான் ஆர்எஸ்எஸ் தலைவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். அது ராகுல் காந்திக்கு வலிக்கிறது.
ஓர் அரசியல் கட்சி, மற்றொரு கட்சியை எதிர்ப்பது, விமர்சிப்பது இயல்பானது. அதுதான் அரசியல். ஆனால், இந்திய அரசை எதிர்க்கிறோம் என, 55 ஆண்டுகள் நாட்டை ஆண்ட குடும்பத்திலிருந்து ஒருவர் கூறுகிறார் என்றால் அதுதான் தேசத் துரோகம்.
அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பாஜக அரசு செயல்படுகிறது என ராகுல் காந்தி திரும்ப திரும்ப கூறி வருகிறார். நெருக்கடி நிலையை கொண்டு வந்து அரசியலமைப்பையே முடக்கிய தனது பாட்டி இந்திரா காந்தி பெயரில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து விட்டு, அரசியலமைப்புக்கு ஆபத்து என ராகுல் காந்தி பேசியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
காங்கிரஸின் கூட்டணி கட்சியான திமுக ஆட்சி செய்யும் தமிழகத்தில், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளதுபடி, சட்டப்பேரவையில் தேசிய கீதத்தை முதலில் இசைக்க ஆளுநர் கூறினால் முடியாது என்கின்றனர். மறுபுறம், அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆபத்து ஆபத்து என வெற்று கூச்சலிடுகிறார்கள்.
இந்தியாவை ஒரு நாடாகவே ஏற்க மறுக்கும் திமுகவின் தேச விரோதப் பாதையில் காங்கிரஸ் கட்சியும் பயணிக்க தொடங்கி விட்டது என்பதையே ராகுல் காந்தியின் பேச்சு காட்டுகிறது. காங்கிரஸ், திமுக-விற்கு மக்கள் தக்க நேரத்தில் பாடம் புகட்டுவார்கள்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...