Published : 17 Jul 2018 09:58 AM
Last Updated : 17 Jul 2018 09:58 AM
சென்னை அடையாறில் நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் மணிமண்டபம் திறக்கப்பட்டு 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னமும் அவரது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்கூட இடம்பெறவில்லை.
சிவாஜிகணேசனின் அரிய புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள், அவருக்கு கிடைத்த விருதுகள் என எதுவும் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுவதால், மணிமண்டபம் தனது தலைவருக்கு பெருமை சேர்க்கவில்லை என்று ரசிகர்களும், பொதுமக்களும் ஆதங் கப்படுகின்றனர்.
நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு சென்னை அடையாறில் ரூ.2 கோடியே 80 லட்சத்தில் மணிமண்படம் கட்டப்பட்டது. இதை கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி (சிவாஜி பிறந்த நாள்) துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சிவாஜிகணேசனுக்கு மணிமண்ட பம் திறந்தது ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் அப்போது மகிழ்ச்சி அளித்தது. அதன்பிறகு மணிமண்டபம் மெருகூட்டப்படும். அதன் பிறகு ஏராளமானோர் வந்து பார்த்துச் செல்வார்கள் என்று எதிர்பார்த்த வர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதுகுறித்து சிவாஜிகணேசன் ரசிகர் ராஜேஷ் என்பவர் கூறும்போது, “தமிழ் திரையுலகில் சிவாஜிகணேசன் சகாப்தமாக வாழ்ந்து மறைந்தார். அவரைப் பற்றிய அரிய புகைப்படங்கள், குறிப்பாக சிறிய வயது புகைப்படங்கள், தெரியாத பல தகவல்கள் கிடைக்கும் என்று ஆவலாக வந்தேன். இங்கு வந்து பார்த்தால் அழகிய புல்வெளிகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் நடுவே சிவாஜிகணேசனின் முழு உருவச் சிலை கம்பீரமாக காட்சியளிக்கிறது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, முன்னாள் முதல்வர்கள் காமராஜ், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் கிருபானந்தவாரியார் ஆகியோருடன் சிவாஜிகணேசன் இருக்கும் புகைப்படங்கள் சிறியதும் பெரியதுமாக வைக்கப்பட்டுள்ளன. தில்லானா மோகனாம்பாள், கர்ணன் ஆகிய படங்களின் சிவாஜிகணேசனின் சிறப்புத் தோற்றம் என மொத்தமாக 20 படங்கள் மட்டுமே உள்ளன. அவ்வளவுதான். அதிகபட்சம் 10 நிமிடங்களுக்கு மேல் பார்ப்பதற்கு எதுவுமே இல்லை. சிவாஜியைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு இல்லாதது பெருங்குறையாகும்” என்றார்.
இதுகுறித்து நடிகர்திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் கூறும்போது, “சிவாஜிகணேசன் மணிமண்டபம் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், அரசால் தெரிவு செய்யப்பட்ட 188 சிவாஜிகணேசன் புகைப்படங்கள், ரூ.5 லட்சத்து 53 ஆயிரம் செலவில் அலுமினிய சட்டம் அமைத்து லேமினேசன் செய்து வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மணிமண்டபம் திறந்து 8 மாதங்கள் ஆகியும் இன்னமும் சிவாஜி புகைப்படங்கள், அவரது வாழ்க்கைக் குறிப்பு, அவர் பயன்படுத்திய பொருட்கள், வாங்கிய பரிசுகள், விருதுகள் ஆகியவற்றை வைப்பதற்கான அறிகுறிகூட இல்லை. இது, ரசிகர்கள், பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. எனவே, ஜூலை 21-ம் தேதிக்குள் (சிவாஜி நினைவு நாள்) புகைப்படங்களை மணிமண்டபத்தில் வைக்க வேண்டும் என்று முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன்” என்றார்.
இதுதொடர்பாக செய்தி, மக்கள் தொடர்புத் துறை (நினைவகங்கள்) அதிகாரி கூறும்போது, “நடிகர் சிவாஜிகணேசனின் அரிய புகைப் படங்களை அவரது குடும்பத்தினரிடம் கேட்டுள்ளோம். அவை கிடைத்ததும் அவற்றில் தெரிவு செய்யப்படும் புகைப்படங்கள் சிவாஜிகணேசனின் பிறந்த நாளான வரும் அக்டோபர் 1-ம் தேதிக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
நடிகர் சிவாஜிகணேசன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ள முதல்வர் கே.பழனிசாமி, சிவாஜிகணேசனின் மணிமண்டபம் அவரது நினைவைப் போற்றும் வகையில் மெருகூட்டப்பட வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித் துறைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்பதே சிவாஜி ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT