Published : 16 Jan 2025 05:30 PM
Last Updated : 16 Jan 2025 05:30 PM
சென்னை: “தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியை, குடும்ப ஆட்சியை விரட்டவும், எம்ஜிஆர், ஜெயலலிதா பேரியக்கத்தை ஆட்சிப் பீடத்தில் மீண்டும் அமர்த்தவும், தமிழக வாக்காளர்கள் ஒவ்வொருவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அதிமுகவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “எம்ஜிஆர் ஆட்சிக்குப் பின்னர்தான், அரசாங்கங்கள் ஒரு சாதாரண தனி மனிதனை முன்வைத்து திட்டங்களைத் தீட்ட ஆரம்பித்தன. அந்தத் திட்டங்கள், ஒரு ஜனநாயகம் என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு இலக்கணம் வகுக்கின்ற திட்டங்களாகவும், ஒரு சாதாரண தனி மனிதனுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் அரசாங்கத்தினுடைய முதல் கடமை என்று உணர்த்துகின்ற திட்டங்களாகவும் அமைந்தன.
எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டம், இலவச வேட்டி சேலை திட்டம் உட்பட ஏழை, எளியவர்களுக்காக தீட்டப்பட்ட பல்வேறு திட்டங்கள்தான் இன்றளவும் வரலாறாய் நிலைத்து நிற்கிறது. இனி, எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இத்தகைய திட்டங்களைத் தான் அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியை, குடும்ப ஆட்சியை விரட்டவும், எம்ஜிஆர், ஜெயலலிதா பேரியக்கத்தை ஆட்சிப் பீடத்தில் மீண்டும் அமர்த்தவும், தமிழக வாக்காளர்கள் ஒவ்வொருவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.அதிமுக-வின் பொற்கால ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் மலரச் செய்யும் மாபெரும் மக்கள் பணியில் நாம் அனைவரும் முழு மனதோடு ஈடுபட இந்நாளில் உளமார உறுதியேற்போம்.
ஜனநாயகத்தை சீர்குலைக்க, நம் அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி, தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்குகின்ற கடமையும், பொறுப்பும், நம் அனைவர் முன்பும் இருக்கின்றது. அந்தப் பயணத்தில் அதிமுகவினர் ஒவ்வொருவருடைய உழைப்பும், ஆர்வமும் மிகவும் இன்றியமையாததாகும். உங்கள் முயற்சிகள் அனைத்துக்கும் என்றென்றும் நான் உறுதுணையாக இருப்பேன். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அதிமுகவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம், வெற்றிவாகை சூடுவோம்” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...