Published : 16 Jan 2025 11:14 AM
Last Updated : 16 Jan 2025 11:14 AM
சென்னை: ‘மதுரை -தூத்துக்குடி ரயில்வே திட்டத்தில் தமிழக அரசிடம் இருந்து நிலம் தொடர்பான பிரச்சினை எதுவும் இல்லை’ என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை, பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த 10-ம் தேதிஅன்று ஆய்வு செய்தார். அப்போது, நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு புதிய ரயில் பாதை திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இத்திட்டம் வேண்டாம் என தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக கடிதம் அனுப்பி உள்ளது. அதனால், இத்திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட்டது என்று தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதற்கு பதில் அளித்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்துக்கு இரண்டு பகுதிகளாக நிலம் எடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கான நிர்வாக அனுமதியும் தமிழக அரசு வழங்கி உள்ளது. எனவே, இத்திட்டத்தை கைவிடுமாறு அரசு சார்பில் கோரப்பட்டது அடிப்படை ஆதாரமற்றது’ என தெரிவித்தார். இந்நிலையில், மதுரை -தூத்துக்குடி ரயில்வே திட்டத்தில் தமிழக அரசிடம் இருந்து நிலம் தொடர்பான பிரச்சினை எதுவும் இல்லை என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பூரில் ஐசிஎஃப் தொழிற்சாலையில், நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பத்திரிகையாளர்கள் ஒரே நேரத்தில் கேள்விகள் கேட்க, மதுரை - தூத்துக்குடி புதிய பாதை திட்டம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது, ஆனால் தொழிற்சாலையின் பின்னணி இரைச்சல் காரணமாக அது தனுஷ்கோடி திட்டம் என்று கேட்டு, அதற்கு ஏற்றவாறு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்தார்.
இதன்படி, தனுஷ்கோடி பாதை திட்டம் தொடர்பாக, நிலம், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் காரணமாக, இத்திட்டம் கைவிடப் படலாம் என, ரயில்வே அமைச்சகத்துக்கு, மாநில அரசு கடிதம் எழுதியுள்ளதாக, அமைச்சர் பதிலளித்தார். இதனை செய்தியாளர்கள் அவரது மேற்கண்ட கருத்துக்களை மதுரை-தூத்துக்குடி திட்டத்துக்காக கூறியதாக எடுத்துக் கொண்டதால், எதிர்பாராத குழப்பம் ஏற்பட்டது.
மதுரை-தூத்துக்குடி திட்டத்தில் தமிழக அரசின் நிலம் தொடர்பான எந்தப் பிரச்சினையும் இல்லை என அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். இரைச்சலான தொழிற்சாலை சூழலில் பத்திரிகையாளர்கள் ஒரே நேரத்தில் பல கேள்விகளை கேட்டதால் தவறான தகவல் புரிதல் ஏற்பட்டது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மதுரை - தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டம் தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான திட்டம். எனவே, இத்திட்டத்துக்கு தேவையான நில எடுப்பு பணிகளுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. இதற்கான உரிய நிதி ஒதுக்கீடு செய்து, இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற மத்திய அரசை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும்’ என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...