Published : 05 Jul 2018 12:08 PM
Last Updated : 05 Jul 2018 12:08 PM
மதுரை திருப்பரங்குன்றத்தில் இன்று அதிகாலை ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் கணவன், மனைவி, குழந்தை என மூன்று பேர் பலியாகினர்.
கடன் தொல்லை காரணமாக சிலிண்டரை வெடிக்கச் செய்து தற்கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை திருப்பரங்குன்றம் அருகிலுள்ள பாலாஜி நகர் லட்சுமி தெருவில் வசித்தவர் ராமமூரத்தி (43). இவரது சொந்த ஊர் கழுகுமலை. இவர் கடைகளுக்கு மிட்டாய் சப்ளை செய்யும் சொந்த தொழில் செய்தார். இவரது மனைவி காஞ்சனா (35), இவர்களது மகள் அக்ஷயா (6).
இன்று அதிகாலை 3 மணிக்கு படுக்கை அறையில் கியாஸ் சிலிண்டர் வெடித்த நிலையில், ராமமூர்த்தி மயக்க நிலையிலும், காஞ்சனா, அக்ஷயா இறந்தும் கிடந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த திருநகர் போலீஸார் இருவரின் உடல்களைக் கைப்பற்றினர். மயங்கிக் கிடந்த ராமமூரத்தியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரும் இறந்தார்.
போலீஸ் விசாரணையில், தொழில் நஷ்டம் காரணமாக சிலிண்டரை வெடிக்கச் செய்து தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.
இது குறித்து போலீஸார், "தொழில் நஷ்டம், குடும்பப் பிரச்சினையில் கணவன் மனைவி பேசாமல் இருந்துள்ளனர். இச்சூழலில் குடும்பத்தினருடன் தற்கொலை செய்வதென ராமமூர்த்தி முடிவெடுத்திருக்கிறார்.
இதன்படி, அதிகாலையில் படுக்கை அறையில் சிலிண்டர் வைத்து, திறந்துவிட்டிருக்கலாம். அறை முழுவதும் கியாஸ் பரவிய நிலையில் தீப்பற்ற வைத்திருக்கலாம். சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் மூவரும் உயிரிழந்தனர். கடன் தொல்லையே தற்கொலை முடிவுக்குக் காரணமாக இருக்கலாம். மனைவி, குழந்தைகள் தூங்கியபோது, இதை ராமமூரத்தி நிறைவேற்றி உள்ளார்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT