Published : 16 Jan 2025 08:03 AM
Last Updated : 16 Jan 2025 08:03 AM
குன்றத்தூர் / மாமல்லபுரம்: திருவள்ளுவர் சிலை ஊர்வலத்தை குன்றத்தூரில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.
குன்றத்தூர் திருவள்ளுவர் அறக்கட்டளை குழுவினர் சார்பில் தெய்வப் புலவர் திருவள்ளுவரின் சிலை ஊர்வலம் குன்றத்தூர் முக்கிய வீதிகளில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை முன்னதாக நகராட்சி அலுவலகத்தின் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தின்போது வீதி எங்கும் பொது மக்கள் தங்கள் வீட்டுக்கு வெளியில் திருவள்ளுவர் படத்தை வைத்து மாலை அணிவித்து வழிபட்டனர். பொதுமக்கள் மலர் தூவி திருவள்ளுவர் சிலையை வழிபட்டனர். வீதிகளில் திருவள்ளுவர் சிலை ஊர்வலம் வரும்போது குழந்தைகள், பெரியவர்கள் குறள் சொல்லுதல் திருக்குறள் பெருமைகளை உரைத்தல், திருவள்ளுவர் சொன்ன அறநெறிகளை எடுத்துச் சொல்லுதல் போன்ற சொற்பொழிவு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றன. ஒவ்வொரு ஆண்டும் தைத்திங்கள் முதல் நாள் குன்றத்தூர் பகுதியில் இவ்வாறு சிலை ஊர்வலத்தை தெய்வப் புலவர் திருவள்ளுவர் அறக்கட்டளை குழுவினர் நிகழ்த்தி வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை குழுத் தலைவர் குப்புசாமி, பாவேந்தர் தமிழ்வழி பள்ளி தாளாளர் வெற்றிச்செழியன், ஊரக வளர்ச்சி துறையின் வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். திருக்குறள் சொன்ன மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இனிப்புகளும் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன.
மாமல்லபுரத்தில்...: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் மல்லை தமிழ் சங்கம் சார்பில் கடற்கரையில் உள்ள திருவள்ளூவர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், சங்கத் தலைவர் மல்லை சத்யா தலைமையில் நிர்வாகிகள் திருவள்ளூவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், திருக்குறள் வாசித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மல்லைத் தமிழ்ச் சங்க செயலாளர் பாஸ்கர், செயலக நிர்வாகிகள் அப்துல்ஹமீது, பெருமாள், ஆசிரியர் ஜெகந்நாதன், முனைவர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment