Published : 16 Jan 2025 04:59 AM
Last Updated : 16 Jan 2025 04:59 AM
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக, பாஜக என முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருசேர புறக்கணித்துவிட்ட நிலையில், ஒற்றை ஆளாய் ஆளும் கட்சியை எதிர்த்து களத்தில் நிற்கிறது சீமானின் நாதக.
2016-ல் 1.1 சதவீதம், 2019-ல் 3.87, 2021-ல் 6.58 சதவீதம் என படிப்படியாக தனது வாக்கு வங்கியை வளர்த்த நாம் தமிழர் கட்சி, 2024 மக்களவைத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளைப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி அந்தஸ்தை பெற்றிருக்கிறது. இப்படியான சூழலில், “கொங்கு எங்கள் கோட்டை” என மார்தட்டும் அதிமுக-வும் பாஜக-வும் இடைத்தேர்தலை புறக்கணித்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் துணிச்சலுடன் களத்துக்கு வந்திருக்கிறார் சீமான்.
ஈரோடு கிழக்கில் 2023 இடைத்தேர்தலில் நாதக வேட்பாளர் 10,827 வாக்குகள் (6.3 சதவீதம்) பெற்றார். அதிமுக 43 ஆயிரத்து 923 வாக்குகள் பெற்று டெபாசிட்டை தக்கவைத்தது. தற்போது முக்கிய கட்சிகள் களத்தில் இல்லாததால் நாதக-வுக்கு வாக்குகள் இயல்பாகவே அதிகரிக்கலாம்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர்கள், “சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரும் அதிமுக-வும் பாஜக-வும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தங்களின் பலத்தைக் காட்டி இருக்க வேண்டும். இது அவர்களுக்கான சுய பரிசோதனையாகவும் இருந்திருக்கும். ஆனால், கிடைத்த வாய்ப்பை தவறவிட்டு அந்தக் கட்சிகள் அரசியல் பிழையை செய்துள்ளன. ஆளுங்கட்சியின் பணபலம் படைபலத்தை எதிர்த்து நின்று கவுரவமான வாக்குகளைப் பெறமுடியாமல் போனால் அதுவே ஆளும் கட்சிக்கு நற்சான்றிதழ் அளித்தது போலாகிவிடும் என்பதால் எதிர்க்க ஆளில்லாத களத்தில் ஆடிப் பார்க்கட்டும் என எதிர்க்கட்சிகள் விட்டுவிட்டன.
ஆனால், நாதக இந்த இடைத்தேர்தலை ஒரு சவாலாக ஏற்று களமிறங்கியுள்ளது. குறிப்பாக, பெரியார் குறித்த கடும் விமர்சனங்களை முன்வைத்து சர்ச்சையில் சிக்கிய சீமான், அவர் பிறந்த ஈரோடு மண்ணிலேயே கருத்தியல் யுத்தத்தை நடத்த தேர்தலில் போட்டி என்ற முடிவை தைரியமாக எடுத்துள்ளார்.
சீமானின் பெரியார் குறித்த விமர்சனம், வலதுசாரி சிந்தனை கொண்ட வாக்காளர்கள், இந்து அமைப்புகளிடம் வரவேற்பு பெற்றுள்ளதால், அவர்களது வாக்குகளை நாதக பெற வாய்ப்புள்ளது. ஒருவகையில், சீமான் வீசும் இந்த பெரியார் அஸ்திரம், பாஜக-வின் அடிப்படை வாக்கு வங்கியைத் தகர்க்கவும் வாய்ப்புள்ளது. “என்டிஏ தேர்தலைப் புறக்கணித்தாலும், தொண்டர்கள் மனச்சாட்சிப்படி வாக்களிப்பார்கள்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளதால் கடந்த தேர்தல்களைப் போல் அல்லாமல் இம்முறை நாதக கணிசமான வாக்குகளை அறுவடை செய்ய வாய்ப்பிருக்கிறது” என்றார்கள்.
அங்கீகார அடையாளத்தைப் பெற்ற பிறகு நாதக சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் ஈரோடு கிழக்கில் நாதக-வையும் வீழ்த்த ஆளும் கட்சி எந்த எல்லைக்கும் போகும் என கணிக்கிறார் சீமான். அதனால், தானே களத்தில் இறங்கினால் என்ன என தனக்கு நெருக்கமானவர்கள் மட்டத்தில் ஒரு ஆலோசனையும் நடத்தினாராம். அது சரியாக இருக்காது என்பதால் இறுதியாக, உள்ளூர் முகமான சீதாலட்சுமியை நிறுத்தி இருக்கிறார். திமுக வேட்பாளர் சந்திரகுமார் முதலியார் என்பதால், கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த சீதாலட்சுமியை தேர்வு செய்திருக்கிறார் சீமான். இவர் ஏற்கெனவே ஈரோடு, திருப்பூர் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டவர்.
பெரியார் பிறந்த மண்ணில், “பெரியாரை ஆதரிப்பவர்கள் எனக்கு வாக்களிக்க வேண்டாம்” என்ற முழக்கத்துடன் சீமான் தைரியமாக வாள்வீச வருவதால் ஈரோடு கிழக்கில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...