Published : 16 Jan 2025 04:53 AM
Last Updated : 16 Jan 2025 04:53 AM
“அமைச்சர்களும் ஆளும் கட்சியினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவார்கள், அராஜகங்களை, வன்முறை களை நிகழ்த்தி மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்” என அதிமுக அறிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் செய்தித் தொடர்புச் செயலாளர் வைகைச் செல்வன் நமக்களித்த மினி பேட்டி இது.
ஆளும் கட்சி அத்துமீறும் என்பதுதான் இடைத் தேர்தல் புறக்கணிப்புக்கு உண்மையான காரணமா?
இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் இருந்தபோதும், ஏற்கெனவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட்டோம். ஆனால், வாக்காளர்களை அவர்கள் ஆடு, மாடுகளைப் போல பட்டியில் அடைத்து, பழனிசாமி பிரச்சாரத்துக்கு செல்லும்போது, ஊரில் வாக்காளர்களே இருக்கவிடாமல் ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்டனர். அன்று திமுக ஆட்சியில் திருமங்கலம் ஃபார்முலா, இன்று ஈரோடு கிழக்கு ஃபார்முலா. இதன் பின்னணியில் அமைச்சர் செந்தில்பாலாஜி இருந்தார். இதுபோன்ற ஜனநாயகத்தில் அருவருக்கத்தக்க அத்துமீறல்கள் தொடரும் என்பதால் தேர்தலைப் புறக்கணித்திருக்கிறோம்.
பொதுவேட்பாளரை நிறுத்த தமாகா யுவராஜா மூலமாக அண்ணாமலை பழனிசாமிக்கு தூதுவிட்டதாகச் சொல்கிறார்களே..?
இது தவறான தகவல். பாஜக-வுடன் எப்போதும் கூட்டணி இல்லை என பழனிசாமி கூறிவிட்ட பிறகு, இப்படி ஒரு பேச்சுவார்த்தையை அதிமுக அனுமதிக்காது. நாங்கள் அப்படி பேச்சுவார்த்தை நடத்தினால் தொண்டர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் அதிமுக நம்பகத்தன்மையை இழந்துவிடும். அந்த நிலையை கட்சி விரும்பாது.
பழனிசாமி தலைமையில் தேர்தல் தோல்விகளின் எண்ணிக்கை அதிகரித்து விடுமோ என அஞ்சி தேர்தலை ஒதுக்கலாமா?
ஜெயலலிதா இருந்த போதே 1996-ல் மோசமான தோல்வியைச் சந்தித்தோம். இனி தமிழகத்தில் இரட்டை இலை துளிர்க்காது என்று ஆருடம் கூறினர். ஆனால், 2001 தேர்தலில் அமோக வெற்றி பெற்றோம். எம்ஜிஆர் காலத்தில் மக்களவை தேர்தலில் கோபிசெட்டிபாளையம், சிவகாசி ஆகிய 2 தொகுதிகளில் மட்டுமே வென்றோம். அடுத்து வந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றது. அதனால் தோல்வியைக் கண்டு அதிமுக ஒருபோதும் அஞ்சியதில்லை.
அரசுக்கு எதிராக பல பிரச்சினைகள் இருக்கையில், அதையெல்லாம் வாக்குகளாக அறுவடை செய்யாமல் இப்படி புறக்கணிப்பது தான் ராஜதந்திரமா?
இடைத்தேர்தலில் வெற்றிக்கோட்டைத் தொட திமுக தரம் தாழ்ந்த, ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்களில் ஈடுபடுகிறது. அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது. வெற்றிக்காக ஒரு போதும் அதிமுக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடாது. அதனால் போட்டியிடுவதை தவிர்த்திருக்கிறோம்.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் திமுக-வினர் மக்களைச் சந்திக்க அஞ்சுகிறார்கள் என்கிறார் பழனிசாமி. அப்படியெனில் இடைத்தேர்தலில் உங்களுக்குத் தானே வாய்ப்பு இருக்கும்... பிறகு ஏன் புறக்கணிப்பு?
இந்த ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுவதும், மக்களைச் சந்திக்க அமைச்சர்களும், இதர மக்கள் பிரதிநிதிகளும் அஞ்சுவதும் உண்மை. தேர்தல் நேர்மையாக நடந்தால் நிச்சயம் திமுக தோற்கும். ஆனால், இந்த இடைத்தேர்தலில் அரசியல், அதிகார பலம், பண பலம் ஆதிக்கம் செலுத்துவதால், மக்களால் தைரியமாக வாக்களிக்க முடியாது. அவர்கள் மிரட்டி அச்சுறுத்தப்படுவார்கள். அப்போது அங்கு நேர்மையான வெற்றி கிடைக்காது.
திமுக-வின் ஆட்சி அதிகாரம், பண பலம் 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் இருக்குமே... அந்தத் தேர்தலையும் அதிமுக புறக்கணிக்குமா?
இடைத்தேர்தல் மனநிலை வேறு, பொதுத்தேர்தல் மனநிலை வேறு. இந்தத் தேர்தலில் ஒரே தொகுதியில் ஒட்டுமொத்த மாநில திமுக-வும் குவிந்திருக்கும். பணம் விளையாடும். ஆனால், பொதுத் தேர்தலில் அவர்களின் செல்வாக்கு 234 தொகுதிகளுக்கும் பரவலாக்கப்படும்போது, இடைத்தேர்தலில் காட்டும் வலிமையை, அவர்களால் காட்டமுடியாது.
திமுக-வுக்கு எதிரான அதிமுக-வின் முதல் வெற்றியே திண்டுக்கல் மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வெற்றி தானே. அப்படிப்பட்ட கட்சி, இடைத்தேர்தலைக் கண்டு அஞ்சலாமா?
அன்றைய அரசியல் களமும், காலகட்டமும் வேறு. அன்றைய இடைத்தேர்தலையும், இன்றைய இடைத் தேர்தலையும் ஒப்பிட முடியாது. இன்று பணம் கொடுத்து, மக்களை அடிமைப்படுத்தும் சூழ்நிலையை திமுக-வினர் உருவாக்கிவிட்டனர். அன்று மத்தியில் காங்கிரஸ், மாநிலத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோது, இரண்டையும் டெபாசிட் இழக்கச் செய்து, அதிமுக வெற்றி பெற்றது வரலாறு. அது ஒரு மகத்தான காலகட்டம். அதிமுக எப்போதும் சோர்ந்து போகாத இயக்கம். மீண்டும் வரலாறை படைப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...