Published : 16 Jan 2025 04:22 AM
Last Updated : 16 Jan 2025 04:22 AM
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடிமதிப்புள்ள சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2011 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக உள்ளார். தற்போது ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ளார். இவர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த கால கட்டமான 2013-ம் ஆண்டு, பிரபல தனியார் நிறுவனம் சென்னையை அடுத்துள்ள பெருங்களத்தூரில் 57.94 ஏக்கர் நிலத்தில் 1,453 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பைக் கட்ட அனுமதி கோரியது.
இதற்காக அந்த நிறுவனம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் விண்ணப்பித்து இருந்தது. 2013-ல், இந்த நிறுவனம் விண்ணப்பித்த போதிலும் சுமார் 3 ஆண்டுகள் அத்திட்டத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்த சூழலில் 2016-ம் ஆண்டு திடீரென அத்திட்டத்துக்கு அனுமதி கிடைத்தது. இந்த அனுமதியை வழங்க அப்போதைய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு மிகப் பெரிய தொகை லஞ்சமாக தரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக தமிழக காவல்துறையின் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதில் வைத்திலிங்கத்தின் மகன்கள் இயக்குநர்களாக உள்ள நிறுவனத்துக்கு கடன்போல பல்வேறு நிறுவனங்கள் மூலம் ரூ.27.9 கோடி தரப்பட்டதாகவும் அந்த நிறுவனம் திடீரென கடனை திருப்பி தரமுடியவில்லை என்று நோட்டீஸ் அனுப்பிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த லஞ்ச பணத்தை பயன்படுத்தி வைத்திலிங்கமும், அவரது மகன்களும் திருச்சி பாப்பாகுறிச்சியில் ரூ.24 கோடி மதிப்புள்ள 4.5 ஏக்கர் நிலத்தை வாங்கியதாக கூறப்பட்டு இருந்தது.
11 பேர் மீது வழக்குப்பதிவு: இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தியது. அதில், வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் மீது அளிக்கப்பட்ட புகாரில் உண்மை இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன இயக்குநர் மற்றும் வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முக பிரபு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. குறிப்பாக 2011 - 2016 வரையிலான அதிமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக வைத்திலிங்கம் ரூ.33 கோடி சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கை பதிவு செய்திருந்தது.
பல்வேறு இடங்களில் சோதனை: இதுஒருபுறம் இருக்க, சட்ட விரோத பணப் பரிமாற்றம் பிரிவின் கீழ் அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. அதுமட்டும் அல்லாமல் வைத்திலிங்கம் தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி பல ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டது.
இந்நிலையில், வைத்திலிங்கத்துக்கு சொந்தமான ரூ.100 கோடியே 92 லட்சம் மதிப்புள்ள 2 அசையா சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவான வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...