Published : 16 Jan 2025 03:48 AM
Last Updated : 16 Jan 2025 03:48 AM
சென்னை: அம்பேத்கர் இந்துத்துவா கொள்கைக்கு எதிரி என்று திருமாவளவன் தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார். இதுதொடர்பாக ஒருநாள் விவாதத்துக்கு வாருங்கள் என்று அவருக்கு நான் சவால் விட இருக்கிறேன் என்று ‘துக்ளக்’ இதழின் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்தார்.
துக்ளக் இதழின் 55-வது ஆண்டு நிறைவு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் பேசியதாவது: ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி: காங்கிரஸ் இல்லாத பாரதம் என்ற பாஜகவின் கொள்கையை ஏற்கமுடியாது. பாரத ஜனநாயகத்துக்கு எதிர்க்கட்சி என்பது அவசியம். ஆனால், அந்த கட்சியின் எதிர்காலம் ராகுலை சார்ந்துள்ளது. தலைமை பொறுப்புக்கு ராகுல் தகுதியில்லை என்பதை முன்பே கூறிவிட்டோம். தற்போது கூட்டணியில் உள்ள தோழமை கட்சிகளும் அதை உணர்ந்து கூறிவருகின்றனர்.
தமிழகத்தில் சமுதாய அளவில் பெரிய மாற்றம் வந்து கொண்டிருக்கிறது. அரசியல் அளவில் அந்த மாற்றம் வராமல் தடுப்பதற்கான காரணம் வாக்கு வங்கி மற்றும் சாதி அரசியல். இந்த இரண்டையும் உடைக்கும்போது தேசிய அரசியல் தமிழகத்தில் உருவாகும். இங்கு ஆர்எஸ்எஸ், பாஜக எந்த அளவுக்கு வளர்கிறதோ, அந்த அளவுக்குதான் மாற்றம் வரும். தற்போதைய முதல்வர் ஸ்டாலின் பலவீனமான தலைவர். எனவே, திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில், அவர் நிச்சயமாக ஆட்சியில் பங்கு கொடுத்துதான் ஆக வேண்டும்.
அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் எல்லா கூட்டணியிலும் நிலையற்ற நிலைமை உள்ளது. திமுகவை தோற்கடிக்க பாஜகவும், அதிமுகவும் சேர வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், பழனிசாமி போன்ற ஒருதலைவரை வைத்து கொண்டு இந்த இணைப்பை எப்படி ஏற்படுத்துவது என்பது புரியவில்லை. திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற உறுதி பழனிசாமியிடம் இல்லை. அரசியலில் முதல்முறையாக பெரியாரை நேரடியாக எதிர்த்ததற்காக சீமானை பாராட்டுகிறேன். இது தமிழகத்துக்கு நல்லது. அம்பேத்கர் இந்துத்துவா கொள்கைக்கு எதிரி என்று திருமாவளவன் தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார். இதுதொடர்பாக ஒருநாள் விவாதத்துக்கு வாருங்கள் என்று அவருக்கு நான் சவால்விட இருக்கிறேன்.
மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல்: திட்டமிட்ட கொள்கைகள், வெளிப்படையான நிர்வாகம் காரணமாக இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த வளர்ச்சி அடுத்த 22 ஆண்டுகளுக்கு தொடரும். இதனால் 2047-ம் ஆண்டு இந்தியா வளர்ந்த நாடாகும். அதற்கான அடித்தளத்தை பிரதமர் மோடி வலுவாக அமைத்துள்ளார். இந்திய அரசியல் சாசனத்தில் 370-வது பிரிவை நீக்க தைரியமாக நடவடிக்கை எடுத்தார் பிரதமர் மோடி. தனது அதிரடி நடவடிக்கைகளால் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மத்திய அரசு கொண்டுவரும் ஒவ்வொரு திட்டமும் மக்களின் நல்வாழ்வையும், சமூக மேம்பாட்டையும் மனதில் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. வெளிப்படையான நிர்வாகம் பின்பற்றப்படுவதால் முறைகேடு என்ற பேச்சுக்கே இடமில்லை. தற்போது இந்தியா அடைந்துள்ள எழுச்சியால் உலக நாடுகள் இந்தியாவின் தலைமைத்துவத்தை அங்கீகரிக்க தொடங்கி உள்ளன.
தமிழ்நாடு தன்னுரிமை கழக தலைவர் பழ.கருப்பையா: நாட்டில் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு மாறாக அரசியலின் தரம் மிகவும் கீழ்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஒருங்கிணைந்த பள்ளிகல்வித் திட்டத்தில் மத்திய அரசு நிதி தர மறுப்பதால்தான் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் தர முடியவில்லை என்று தமிழக அரசு கூறுவது வேடிக்கையாக உள்ளது. மேலும், தமிழக அரசியலில் அறிவார்ந்த வாதங்களை முன்வைக்க சிறந்த தலைவர்கள் இல்லை.
அதேபோல, நிலையான கொள்கை மற்றும் கருத்துகளால் நாடு முன்னேற முடியாது. காலத்துக்கு ஏற்ப தங்கள் கருத்துகளையும், கொள்கைகளையும் மாற்றிக் கொள்வது தவறு கிடையாது. அது தர்மத்துடன் பொருந்துகிறதா என்பதைதான் பார்க்க வேண்டும். அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் என அனைவரும் வெளிப்படையாக ஊழல் செய்யும் ஒரு சூழல் தமிழகத்தில் உருவாகியுள்ளது. அண்ணா பல்லைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து சிறப்பு குழுவை நியமித்துள்ளது. இது தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் கிடைத்த அவமானம். நேர்மையற்ற அரசியல் தலைவர்களின் கையில் அதிகாரிகள் இருக்கும் போது, மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பதை உறுதியாக நம்ப முடியாது. இவ்வாறு அவர்கள் பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...