Last Updated : 15 Jan, 2025 11:17 PM

1  

Published : 15 Jan 2025 11:17 PM
Last Updated : 15 Jan 2025 11:17 PM

ஈஷாவில் பொங்கல் விழா கோலாகலம்  - நாட்டு மாடுகளின் கண்காட்சியுடன் கலை நிகழ்ச்சிகள்!

கோவை ஈஷாவில் சிறப்பாக கொண்டாடப்பட்ட மாட்டுப் பொங்கல் விழா.

கோவை: கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகி சிலை முன்பு பொங்கல் விழா கடந்த இரு நாட்களாக விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் நாட்டு மாடுகளின் கண்காட்சி மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள் பெரும் உற்சாகத்தோடு நடைபெற்றது.

ஈஷாவில் பொங்கல் விழா பாரம்பரிய முறையில் ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு கொண்டாட்டங்கள் மண் பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்வோடு துவங்கியது. இதில் ஈஷாவை சுற்றியிருக்கும் பழங்குடி மக்கள், தன்னார்வலர்கள், ஆசிரமவாசிகள் என ஆயிரக்கணக்கானோர் இணைந்து பானைகளில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.

விவசாயத்தில் மிக முக்கிய பங்காற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஈஷாவில் பராமரிக்கப்படும் நாட்டு மாடுகளுக்கு சிறப்பான முறையில் வழிபாடுகள் செய்யப்பட்டன. மேலும், அருகி வரும் நாட்டு மாடு இனங்களான காங்கேயம், ஓங்கோல், காங்கிரிஜ், உம்பளாச்சேரி, கிர் உள்ளிட்ட 23 வகையிலான நாட்டு மாடுகளின் கண்காட்சி நடைபெற்றது. ஈஷா கோசாலையில் 700-க்கும் அதிகமான பாரம்பரிய நாட்டு மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, புதன்கிழமை மாலையில் தூத்துக்குடி சகா கலைக் குழுவினரின் ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட 7 வகையான தமிழர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோலாகலமாக நடைபெற்ற இவ்விழா இரவு 7 மணியளவில் ஆதியோகி திவ்ய தரிசனத்துடன் நிறைவுப்பெற்றது. பொங்கல் விடுமுறை நாட்களை முன்னிட்டு கடந்த இரு நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் ஈஷா யோகா மையத்திற்கு வந்துச் சென்றனர்.

முன்னதாக ஈஷா நிறுவனர் சத்குரு வெளியிட்டிருந்த பொங்கல் வாழ்த்துச் செய்தியில், "பொங்கல் அல்லது சங்கராந்தி என்பது பூமித்தாய் வசந்த காலத்தை நோக்கி எடுத்துவைக்கும் முதல் அடி. நீங்களும் உங்களுக்குள் வசந்தத்தின் புத்துணர்வை நோக்கி அடியெடுத்து வைக்க வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள காணொளியில் “நம் கலாச்சாரத்தில் பொங்கல் விழா நம் கலாச்சாரத்தில் மிக மிக முக்கியமான விழா. எதற்கு என்றால் நம் உணவை உருவாக்குகின்ற செயலில் பல விலங்குகளுக்கு மிகவும் ஆழமான ஈடுபாடு இருக்கிறது.

நம்முடைய நிலம், நம்முடைய மண் நன்றாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால், அதில் சத்தான உணவு வளர வேண்டுமென்றால் இந்த ஆடு மாடுகள் மற்றும் பல விதமான விலங்குகளுடன் ஒரு ஆழமான தொடர்பு இருக்கிறது. அதனால் இந்த விழா நம்மை பற்றியது அல்ல, அந்த விலங்குகள் பற்றியது, அவர்கள் இல்லாமல் நாம் வாழ முடியாது என்று நமக்குத் தெரியும். நாம் இல்லாமல் அவர்கள் நன்றாக வாழ்வார்கள். அதனால் அவர்களுக்கு நம் நன்றி உணர்வை வெளிப்படுத்தும் விதமாக இந்த விழா கொண்டாடப்படுகிறது" எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x