Published : 15 Jan 2025 10:37 PM
Last Updated : 15 Jan 2025 10:37 PM
மதுரை: மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடு முட்டியதில் உயிரிழந்த மாடுபிடி வீரர் நவீன்குமாரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.14) நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம், விளாங்குடியைச் சேர்ந்த நவீன்குமார் என்ற மாடுபிடி வீரர் மாடு முட்டியதில் காயமடைந்து உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நடந்தது என்ன? - அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் மதுரை விளாங்குடியைச் சேர்ந்த நவீன்குமார் கலந்து கொண்டிருந்தார். களத்தில் சீறிப்பாய்ந்த காளை ஒன்று நவீனின் மார்பில் முட்டியது. இதில் பலத்த காயமடைந்த நவீனை, ரத்தக் காயங்களுடன் அங்கிருந்த மருத்துவக் குழுவினர் மீட்டு, மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு நவீனுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி மாடுபிடி வீரர் நவீன் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...