Last Updated : 15 Jan, 2025 08:33 PM

 

Published : 15 Jan 2025 08:33 PM
Last Updated : 15 Jan 2025 08:33 PM

புதுச்சேரி அரசு தொழில்நுட்ப பல்கலை. மாணவியிடம் அத்துமீறல் - 4 பேர் மீது வழக்குப் பதிவு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்துக்கள் அத்துமீறி நுழைந்த 4 அடையாளம் தெரியாத நபர்கள். மாணவி மற்றும் அவரது ஆண் நண்பரை தகாத வார்த்தைகளால் திட்டி, வாய் தகராறில் ஈடுபட்டுள்ளனர் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வந்த புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது. புதுச்சேரி மாணவர்கள் மட்டுமின்றி வடமாநிலத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் இங்கு கல்வி பயின்று வருகின்றனர். சுமார் 2,500-க்கும் மேற்பட்டோர் படித்து வரும் இந்த பல்கலைக்கழகத்தினுள் கடந்த 11-ம் தேதி சனிக்கிழமை மாலை அங்குள்ள விடுதியில் தங்கி முதலாமாண்டு படிக்கும் வடமாநில மாணவி ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு நுழைந்த வெளி நபர்கள் 4 பேர் அவர்கள் இருவரையும் பார்த்து தவறான வார்த்தைகளால் கமெண்ட் செய்துள்ளனர். அதனை அந்த ஆண் நண்பர் தட்டிக்கேட்டபோது, அவர்கள் ஆபாச வார்த்தைகளால் வசைபாடியுள்ளனர்.

இதனால் அந்த மாணவருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த நான்கு பேரும் சேர்ந்து அந்த ஆண் நண்பரை கடுமையாக தாக்கியுள்ளனர். நிலைமை மோசமானதாலும், பிரச்சினை செய்பவர்கள் வெளிநபர்கள் என்பதாலும் அந்த மாணவி தன்னுடைய செல்போனில் வீடியோ எடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அந்த செல்போனை தட்டிவிட்ட அந்த நபர்கள், மாணவியையும் தாக்கியுள்ளனர். இதனால் அவர் கூச்சலிட, உடனே அந்த நான்கு பேரும் அங்கிருந்து வண்டியில் தப்பிச் சென்றனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மாணவி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று விடுதிக்கு திரும்பியுள்ளார். இந்தப் பிரச்சினை குறித்து பல்கலைக்கழக துணைவேந்தரிடம் அந்த மாணவி முறையிட்ட நிலையில், அதனை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அதே நேரத்தில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வெளி நபர்கள் சிலர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால், தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மாணவிக்கு பாலியல் தொல்லை நடைபெறவில்லை என மறுத்துள்ளது.

மாணவர் அமைப்பு, சமூக அமைப்புகள், சில கட்சியினர் இந்த விவகாரத்தை கையில் எடுத்ததால் இந்தச் சம்பவம் பூதாகாரமான நிலையில், புதுச்சேரி தொழில்நுட்ப பல்லைக்கழக பதிவாளர் சுந்தரமூர்த்தி காலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார், பல்கலைக்கழக வளாகத்துக்கள் அத்துமீறி நுழைந்த 4 அடையாளம் தெரியாத நபர்கள் மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, வாய் தகராறில் ஈடுபட்டுள்ளனர் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், பல்கலைக்கழக கூடத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் ஒருவரும், அவரது நண்பர்களும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக இருவரை கைது செய்துள்ள போலீஸார் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகளிடம் கேட்டபோது, “பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலோ அல்லது பல்கலைக்கழக தரப்பிலோ போலீஸுக்கு எந்தப் புகாரும் வரவில்லை. ஆனாலும் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் நாங்கள் விசாரணையை மேற்கொண்டிருக்கிறோம். முதல் கட்ட விசாரணையில் பாலியல் அத்துமீறல் எதுவும் அங்கு நடைபெறவில்லை. வெளிநபர்கள் மாணவர்களிடம் வாக்குவாதத்திலும் தாக்குதலில் மட்டுமே ஈடுபட்டிருக்கிறார்கள். அதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x