Published : 15 Jan 2025 03:06 PM
Last Updated : 15 Jan 2025 03:06 PM
சென்னை: தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் மொழிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிய தமிழறிஞர்களுக்கு திருவள்ளுவர் விருது மற்றும் தமிழக அரசின் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், சமூக நீதிக்கான “தந்தை பெரியார் விருது விடுதலை ராஜேந்திரனுக்கும், டாக்டர் அம்பேத்கர் விருது து.ரவிக்குமாருக்கும் வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2025-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது புலவர் மு.படிக்கராமு-வுக்கும், 2024ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது எல்.கணேசனுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது கே.வி.தங்கபாலுவுக்கும்,மகாகவி பாரதியார் விருது கவிஞர் கபிலனுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிஞர் பொன்.செல்வகணபதிக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்துக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது வே.மு.பொதியவெற்பனுக்கும் தமிழக முதல்வர் வழங்கி சிறப்பித்தார்.இவ்விருது பெறும் விருதாளர்கள் விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக ரூ.2 லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்புச் செய்யப்பட்டது.
மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2024ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது விடுதலை ராஜேந்திரனுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் விருது து.ரவிக்குமாருக்கும் வழங்கி முதல்வர் சிறப்பித்தார். இவ்விருதுடன் விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக ரூ.5 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் விருது 2024-ல் தோற்றுவிக்கப்பட்டு, முதன்முறையாக இவ்விருதை முத்து வாவாசிக்கு முதல்வர் வழங்கி சிறப்பித்தார். அவருக்கு விருதுத் தொகையாக ரூ.10 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் முதல்வர் சிறப்பித்தார், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment