Published : 14 Jan 2025 05:23 PM
Last Updated : 14 Jan 2025 05:23 PM
மதுரை: மதுரை அவனியாபுரத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடு முட்டியதில் காயமடைந்த மாடுபிடி வீரர் நவீன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி மதுரை அவனியாபுரத்தில் காலை 6.30 மணிக்கு தொடங்கியது. இந்தப் போட்டியை தமிழக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கிவைத்தார்.
10 சுற்றுகள் நிறைவு: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இதுவரை 10 சுற்றுகள் முடிவடைந்துள்ளது. இதில், 20 மாடுபிடி வீரர்கள், 17 காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் 6 பேர் உட்பட மொத்தம் 43 பேர் இதுவரை காயமடைந்துள்ளனர். ஆக்ரோஷத்துடன் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில், 12 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாடுபிடி வீரர் உயிரிழப்பு: அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் மதுரை விளாங்குடியைச் சேர்ந்த நவீன் கலந்து கொண்டிருந்தார். களத்தில் சீறிப்பாய்ந்த காளை ஒன்று நவீனின் மார்பில் முட்டியது. இதில் பலத்த காயமடைந்த நவீனை, ரத்தக் காயங்களுடன் அங்கிருந்த மருத்துவக் குழுவினர் மீட்டு, மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு நவீனுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி மாடுபிடி வீரர் நவீன் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினர் காயம்: அதேபோல், அவனியாபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு தடுப்புகள் இடிந்ததில் சிறப்பு உதவி ஆய்வாளர், காவலர்கள் இருவர் உட்பட மூன்று பேர் காயம் அடைந்தனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டின் இறுதி சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இறுதிச் சுற்றுப் போட்டியில், ஏற்கெனவே வெவ்வேறு சுற்றுகளில் வெற்றி பெற்றுள்ள 30 வீரர்கள் களம் கண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 4 Comments )
இதுபோன்ற பிரச்சனைக்கு தான் இயக்குனர் திரு மிஸ்கின் அவர்கள் பலவருடங்களுக்கு முன்னர் ஒரு நிகழ்ச்சியில் பேசி இருந்தார். "கொஞ்சம் பாதுகாப்புக்காக சிறிய அளவில் கவசங்கள் அணிதுங்கொண்டு கொண்டு விளையாடுங்கள் என்று", இன்னொருவர் இதுபோன்ற கருத்துக்கு "அதில் என்ன வீரம் இருக்கிறது என்று கேலியாக பதில் சொன்னார் " ஒருவேளை அவர் சொன்னதுபோல சிறு பாதுகாப்பு கவசம் இருந்திருந்தால் இந்த உயிர் போய் இருக்காது. போருக்கு போகிறவர்கள் கூட வீரத்திற்கு முன் பாதுகாப்பதை தான் முக்கியப்படுத்துகிறார்கள். ஆனால் ஜல்லிக்கட்டு ஒரு விளையாட்டு தானே அதற்க்கு கொஞ்சம் பாதுகாப்பு கவசம் அணிந்தால் என்ன தவறு.
0
0
Reply
வருந்துகிறோம்.
0
0
Reply