Published : 14 Jan 2025 03:03 PM
Last Updated : 14 Jan 2025 03:03 PM
மதுரை: மதுரை அவனியாபுரத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் இதுவரை 7 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. வாடிவாசலில் இருந்து இதுவரை அவிழ்க்கப்பட்ட 86 காளைகளில், 23 காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி மதுரை அவனியாபுரத்தில் காலை 6.30 மணிக்கு தொடங்கியது. இந்தப் போட்டியை தமிழக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கிவைத்தார்.
முதலில் கோயில் மாடுகள் அவிழ்க்கப்பட்டன. பின்னர் அவிழ்க்கப்பட்டு வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் அடக்கினர். இந்த வீர விளையாட்டுப் போட்டியை காண மதுரை மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் கண்டு ரசித்து வருகின்றனர். காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்கள் ஆரஞ்சு, நீலம் உள்ளிட்ட வண்ணங்களில் உடையணிந்து ஒவ்வொரு சுற்றிலும் தலா 50 வீரர்கள் என்ற கணக்கில் களமாடி வருகின்றனர்.
7 சுற்றுகள் முடிவு: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் இதுவரை 7 சுற்றுகள் முடிவடைந்துள்ளது.
இதுவரை களம் கண்ட 86 காளைகளில் 23 காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்துள்ளனர். முன்னதாக, பகல் 1 மணி வரை கால்நடைத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களால் 512 காளைகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் 484 காளைகள் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
28 பேர் காயம்: அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் இதுவரை மாடுகள் முட்டியதில் 13 மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் 12 பேர் மற்றும் பார்வையாளர்கள் மூவர் உட்பட மொத்தம் 28 பேர் காயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த 5 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறை தடியடி: இதனிடையே, காளைகள் மற்றும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறும் இடத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் நுழைந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இதனால், வீரர்கள், காளை உரிமையாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்தி அங்கிருந்தவர்களை கலைந்துபோகச் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment