Published : 14 Jan 2025 01:52 PM
Last Updated : 14 Jan 2025 01:52 PM

ஜன.16-ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: இந்த ஆண்டு சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண பார்வையாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கேலரி. படம்: நா.தங்கரத்தினம்

மதுரை: தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு போட்டியே முதன்மையானது. இந்தப் போட்டிகளில் பரிசு வெல்வதை விட இதில் பங்கேற்பதையே காளை உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் பெருமையாக கருதுவர். தைத்திருநாளையொட்டி மதுரை மாவட்டத்தில் திருவிழா போல அவனியாபுரம், பால மேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தை மாதத்தின் முதல் நாளான இன்று (ஜனவரி 14) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. நாளை (ஜன.15) பாலமேடு ஜல்லிக்கட்டும், ஜன.16-ம் தேதி உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியும் நடக்கின்றன.

பாலமேட்டில் உள்ள மஞ்சமலை ஆறு மைதானத் திடலில் மாவட்ட நிர்வாகமும், பாலமேடு கிராம பொது மகாலிங்க மடத்துக் குழுவும் இணைந்து இந்தப் போட்டியை நடத்துகின்றன. மதுரையைச் சுற்றியுள்ள தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி, சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த காளைகளும் தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த காளைகளும் பங்கேற்கின்றன.

பால மேட்டில் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் கேலரிகள் அமைக்கப் பட்டுள்ளன. விழா மேடை, விஐபிகள் கேலரி, காவல்துறை, உயர் அதிகாரிகள் கேலரி மற்றும் பார்வையாளர்கள் அமரும் வகையில் பிரம்மாண்ட கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு, மதுரை மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுகளில் முதன்மையானது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க துணை முதல்வர் உதயநிதி வருகிறார். அவர், காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை அமர்ந்து போட்டிகளை ரசிக்கவும், ஒவ்வொரு சுற்றிலும் பிடிபடாத காளையின் உரிமையாளருக்கும், காளையை அடக்கும் வீரருக்கும் மோதிரம், தங்க நாணயம் வழங்குகிறார்.

மாலையில் நடக்கும் பரிசளிப்பு விழாவில் அதிக காளைகளை அடக்கிய வீரருக்கும், பிடிபடாத சிறந்த காளைக்கும் கார்கள் பரிசாக வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டும் கடந்த ஆண்டை போல் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், விஐபிகளின் காளைகள், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அவிழ்க்கப்படுகின்றன.

அந்த காளைகளை பிடிக்க, அதன் உரிமையாளர்கள் கூடுதல் பரிசுத் தொகையை அறிவிப்பதும், அதனைப் பிடிக்க மாடுபிடி வீரர்களிடையே கடும் போட்டி ஏற்படுவதும் போட்டியை சுவாரசியப்படுத்தும். ஒவ்வொரு காளைக்கும், வேட்டி, துண்டு, பரிசு பெட்டி, குளிர்பானம், இனிப்பு பெட்டகம் வழங்கப்படுகின்றன. இந்த முதல் மரியாதை விழா குழு சார்பில் காளைக்கு வழங்கிய பிறகே வாடிவாசலில் அவிழ்க்கப்படும். இந்த பரிசு, மரியாதை ஜல்லிக்கட்டுக்கு ஜல்லிக்கட்டு வேறுபடும்.

துணை முதல்வர் பங்கேற்பதால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும், மதுரை - அலங்காநல்லூர் சாலையில் வரவேற்புக்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பரிசு பொருட்கள் அலங்காநல்லூர், பாலமேட்டில் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளன.

அலங்காநல்லூர் போட்டியை பார்வையிட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு, வாடிவாசல் அருகே நிரந்தரமாக பிரம்மாண்ட கேலரி அமைக்கப் பட்டுள்ளது. வெளிநாட்டினரை சுற்றுலாத்துறையினர், சிறப்பு பஸ்களில் போட்டி நடக்கும் நாளில் அலங்காநல்லூர் அழைத்து வருவர்.

அலங்கா நல்லூர் போட்டியைக் காண சுற்றுலாத் துறையில் பதிவு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணி கள் நேற்று மதுரை வந்தனர். அவர்களை சுற்றுலா அதிகாரிகள் வரவேற்றனர். அவர்கள், நேற்று அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்களில் சென்று சுற்றிப் பார்த்தனர்.போட்டி ஏற்பாடுகளை தங்கள் கேமராவில் பதிவு செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
     
    x
    News Hub
    Icon