Published : 14 Jan 2025 09:50 AM
Last Updated : 14 Jan 2025 09:50 AM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாதக வேட்பாளராக சீதாலட்சுமி அறிவிப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், நேற்று வரை 9 சுயேட்சை வேட்பாளர்கள் மட்டும் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், திமுக சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில், மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுவதாக, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியிலும், 2024-ம் ஆண்டு மக்களைவைத் தேர்தலில் திருப்பூர் தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிட்டுள்ளார்.

இடைத்தேர்தலில் போட்டியிட புதிய வேட்பாளரை அறிவித்தால், அவரை வளைக்க ஆளுங்கட்சி முயற்சிக்கும் என்பதால், ஏற்கெனவே நாம் தமிழர் சார்பில் இரு முறை போட்டியிட்ட அனுபவம் கொண்ட சீதாலட்சுமியை வேட்பாளராக நாம் தமிழர் கட்சி தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரதான கட்சிகள் போட்டியிடாத நிலையில், திமுக - நாம் தமிழர் இடையே இருமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இத்தொகுதியில், திமுக சார்பில் முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த சந்திரகுமார் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த சீதாலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுக வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோர் வரும் 17-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர். வேட்பாளர் சுய விபரம்:

  • பெயர்: மா.கி.சீதாலட்சுமி
  • கணவர் பெயர்: இரா.செழியன், எம்.இ.
  • தந்தை பெயர்: ம.கிருஷ்ணன்
  • தாயார் பெயர்: காந்திமதி
  • ஊர்: மாரப்பம்பாளையம்.
  • படிப்பு: முதுகலை ஆய்வியல் நிறைஞர், (எம்.ஏ. எம்பில்.,) இளங்கலை பொருளாதாரம் .கோபி கலைக் கல்லூரி. முதுகலை ஆய்வியல் பாரதியார் பல்கலைக் கழகம். கோவை.
  • பணி: 13 ஆண்டுகள் ஆசிரியப் பணி. (2000 - 2013)
  • தற்போதைய பணி: கேபிள் ஆப்ரேட்டர், விவசாயம்.
  • சமூகம் : கொங்கு வேளாளர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x