Published : 14 Jan 2025 02:06 AM
Last Updated : 14 Jan 2025 02:06 AM
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள அம்பேத்கர் படைப்புகளின் மொழிபெயர்ப்பு நூல்கள் தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: மறைந்த முதல்வர் கருணாநிதியின் 97-ம் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசால் வெளியிடப்பட்ட கனவு இல்லம் திட்டத்தின் நீட்சியாக தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்திய அகாடமி மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த விருதாளர்களுக்கு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கனவு இல்லம் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, கடந்த 1994 முதல் 2023-ம் ஆண்டு வரை சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்திய அகாடமி மொழிபெயர்ப்பு விருது பெற்ற 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த ஒதுக்கீட்டு ஆணைகளை ஆ.செல்வராசு என்ற குறிஞ்சிவேலன், ப.பாஸ்கரன் என்ற பாவண்ணன், சா.மணி என்ற நிர்மாலயா, பி.க.ராஜந்திரன் என்ற இந்திரன், கவுரி கிருபானந்தன், க.பூரணச்சந்திரன், தி. மாரிமுத்து என்ற யூமா வாசுகி, சா.முகம்மது யூசுப் என்ற குளச்சல் யூசுப், கே.வி.ஜெயஸ்ரீ, கண்ணையன் தட்சணமூர்த்தி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
தமிழில் அம்பேத்கரின் படைப்புகள்: அம்பேத்கரின் கருத்துகளை உலகம் முழுவதும் பரப்பும் வகையில் அவரது அனைத்து படைப்புகளையும் இன்றைய இளைஞர்கள் எளிமையாக வாசிக்கும் வகையில் அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்துடன் இணைந்து தமிழ்வளர்ச்சித் துறையால் இந்தியாவில் சாதிகள், சூத்திரர்கள் யார்?, தீண்டப்படாதோர்- அவர்கள் யார்? என மொத்தம் 10 தொகுதிகளாக நூலாக்கம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியும் ஏறத்தாழ 300 பக்கங்களை கொண்டது. மக்கள் பதிப்பான இந்த 10 தொகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், தமிழ் வளர்ச்சித்துறை செயலர் வே.ராஜாராமன், இயக்குநர் ந.அருள், புலவர் செந்தலை ந.கவுதமன், பேராசிரியர் வீ.அரசு, பேராசிரியை மு.வளர்மதி, கல்லூரி கல்வி முன்னாள் துணை இயக்குநர் அ.மதிவாணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment